| ADDED : டிச 05, 2025 08:54 AM
பெலகாவி: பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தின் போது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, வரும் 10ம் தேதி வன்கொடுமை தடுப்பு தினம் கடைப்பிடிப்போம் என்று, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி அறிவித்து உள்ளார். பெலகாவி சிக்கோடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடரின் போது, பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டு அமைதியான முறையில் போராடினோம். ஆனால், எங்கள் மீது அரசு உத்தரவின்படி, போலீசார் தடியடி நடத்தினர். இது லிங்காயத் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். இதற்காக அரசு மன்னிப்பு கேட்கவில்லை. தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, வரும் 10ம் தேதி வன்கொடுமை தடுப்பு தினம் கடைப்பிடிக்க உள்ளோம். அன்றைய தினம் பெலகாவி காந்தி பவனில் இருந்து, வாயில் கருப்பு துணியை கட்டி மவுன ஊர்வலம் நடத்துவோம். இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று முதல்வர் கூறினார். இனி நாங்களாகசென்று இடஒதுக்கீடு கேட்க மாட்டோம். எங்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.