மது விற்பனை, சூதாட்டத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிக்க முடிவு
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகரின், அன்னுார்கேரி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பது, சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்து உள்ளனர்.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில், அன்னுார்கேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மது விற்பனை, சூதாட்டம் ஆகியவை அதிகரித்து வந்தது. பலரும் அதிகாலையிலே மது போதையில் சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் நிலை உருவாகியது.வேலைக்கு செல்வோரில் சிலர், இரவு நேரங்களில் சூதாட்டங்களில் ஈடுபட்டு தங்கள் பணத்தை இழந்தனர். இதனால், சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது.இதை கட்டுப்படுத்த, கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த பெரியவர்களும் ஒன்று கூடி, பஞ்சாயத்து கூட்டம் நடத்தினர். சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர், சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 50,000 ரூபாய் அபராதம் எனவும்; இவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.இம்முடிவிற்கு ஊரில் உள்ள பெண்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.