உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூருக்கான மேம்பாட்டு திட்டங்கள் சட்டசபையில் பட்டியலிட்டார் துணை முதல்வர்

பெங்களூருக்கான மேம்பாட்டு திட்டங்கள் சட்டசபையில் பட்டியலிட்டார் துணை முதல்வர்

பெங்களூரு: பெங்களூரின் மேம்பாட்டுக்கு காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ள பல திட்டங்கள் குறித்து, பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமார், சட்டசபையில் நேற்று விவரித்தார். சட் டசபை கேள்வி நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து, சிவகுமார் கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தேவையின்றி அரசை விமர்சிக்கின்றனர். அது அவர்களின் உரிமை. தங்களை நிலை நிறுத்திக்கொள்ள, எங்களை அவர்கள் விமர்சிக்கின்றனர். அதை தவறு என்று, நான் கூறமாட்டேன். நாங்கள் யாரும் நிரந்தரம் அல்ல. எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பெங்களூரின் நலனுக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என, பல திட்டங்களை வகுத்தேன். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், என்னை விமர்சிக்கட்டும். என் பணிகளை நான் செய்கிறேன். நாளை அவர்களின் விமர்சனங்கள் இறக்கும். எங்கள் பணிகள் நிலைத்திருக்கும். நகரில் சாலைப் பள்ளங்களின் பிரச்னைக்கு தீர்வு காண, எங்கெங்கு பள்ளங்கள் உள்ளன என்பதை, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர, வாய்ப்பு அளித்துள்ளோம். போலீசாரும் கூட, பள்ளங்களை பட்டியலிட்டு அறிக்கை அளித்துள்ளனர். 10,000 பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 5,377 பள்ளங்கள் மூடப்பட்டன. மிச்சமுள்ளவற்றை மூட, நடவடிக்கை எடுத்துள்ளோம். பெங்களூரில் 1,700 கோடி ரூபாய் செலவில், 154 கி.மீ., நீள சாலைகள் 'ஒயிட் டாப்பிங்' செய்யப்படுகின்றன. இத்தகைய சாலைகள் 30 ஆண்டுகள் நன்றாக இருக்கும். துணை சாலைகளும் 'ஒயிட் டாப்பிங்' செய்யப்படுகின்றன. இந்த பணிகளுக்காக, 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. முதல் கட்டமாக 7,500 கோடி ரூபாய் செலவில், 632 கி.மீ., நீள சாலை, ஒயிட் டாப்பிங் செய்யப்படுகிறது. மழைநீர்க் கால்வாய் பக்கத்தில், 300 கி.மீ., நீளமான சாலை அமைக்க, 3,000 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 44 கி.மீ., தொலைவிலான டபுள் டெக்கர் பாலம் அமைக்கப்படும். காவிரி குடிநீர் திட்டத்தின், ஐந்தாம் கட்ட பணிகளை முடித்து, 110 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கிறோம். குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்த முடியாதவர்கள், 12 தவணைகளில் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே கட்டணத்தை உயர்த்தினோம். மிகவும் குறைந்த விலையில், வீட்டு வாசலுக்கு காவிரி நீர் திட்டத்தை செயல்படுத்தினோம். தற்போது ஆறாம் கட்ட திட்டத்துக்கு தயாராகிறோம். சுரங்க சாலை திட்டத்துக்கு செலவு அதிகம் என, குற்றஞ்சாட்டுகின்றனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், நம் மாநிலத்தில் 40 சதவீதம் குறைவான செலவில், சுரங்க சாலை அமைக்கிறோம். 16.6 கி.மீ., தொலைவில் சுரங்க சாலை அமையும். ஒரு கி.மீ., க்கு 770 கோடி ரூபாய் செலவிடுகிறோம். பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில், சுரங்க சாலை அமைப்பதாக, பா.ஜ., - எம்.பி., ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் ஆட்சிக் காலத்தில், இத்தகைய திட்டம் கொண்டு வர முடியவில்லை. நாங்கள் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, திட்டத்தை கொண்டு வருகிறோம். எங்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட, பல எம்.எல்.ஏ.,க்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். அவர்களை பாராட்டுகிறேன். குப்பையை அள்ள 33 கட்டங்களில் டெண்டர் அழைத்துள்ளோம். பெங்களூரின் நான்கு இடங்களில், குப்பை மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன. வரும் நாட்களில், பெங்களூரின், வெளிப்பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி, சென்னப்பட்டணா, மாகடி பகுதிகளிலும் குப்பை மறு சுழற்சி மையங்கள் அமைக்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு, 7,200 தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக வங்கி உதவியுடன், 2,000 கோடி ரூபாய் செலவில், 172 கி.மீ., நீளத்திலான மழைநீர்க்கால்வாய் மேம்படுத்தப்படுகிறது. ஏரிகளுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்த, 1,700 கோடி ரூபாய் செலவிலான திட்டம் வகுத்துள்ளோம். ஹொஸ்கோட், நெலமங்களா, ஓசூர், தாவரகெரேவுக்கு மெட்ரோ இணைப்பு ஏற்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது . காளேன அக்ரஹாராவில் இருந்து, தாவரகெரேவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் மெட்ரோ பாதையில், நடப்பாண்டு டிசம்பர் 26க்குள், மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும். இந்த திட்டங்களுக்கு, பிரதமரிடம் நிதியுதவி கேட்டுள்ளோம். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருக்கு வந்தபோது, பெங்களூரு தொழில்நுட்ப துறையில், இந்தியாவை உலக அளவில் கொண்டு செல்கிறது. நகரின் திறமை அபாரம் என, பாராட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !