உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹிந்துக்களின் சொத்து என்று கூறவில்லை துணை முதல்வர் சிவகுமார் அந்தர் பல்டி

ஹிந்துக்களின் சொத்து என்று கூறவில்லை துணை முதல்வர் சிவகுமார் அந்தர் பல்டி

பெங்களூரு : ' 'சாமுண்டி மலை அரசின் சொத்து; ஹிந்துக்களின் சொத்து என்று கூறவில்லை,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். மைசூரு தசராவை புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைப்பார் என்ற அறிவிப்பு வெளியானது முதல், ஹிந்து அமைப்பினர், பா.ஜ., வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு துணை முதல்வர் சிவகுமார், 'சாமுண்டி மலை ஹிந்துக்களின் சொத்து அல்ல. யார் வேண்டுமானாலும் வரலாம்' என்று கூறியிருந்தார். இதற்கு மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், 'சாமுண்டி மலை அப்போதும், இப்போதும், எப்போதும் ஹிந்துக்களுக்கு சொந்தமானது' என்று பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து பெங்களூரில் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி: நாம் அனைவரும் சாமுண்டியை நிலத்தின் அன்னை என்று வணங்குகிறோம். இதை மன்னர் குடும்பத்தினரும், மாநில அரசும் கூறுகிறது. இது அரசின் சொத்து. இது ஹிந்துக்களின் சொத்து என்று எங்கும் சொன்னதில்லை. இதற்கு ஹிந்துக்கள் மட்டும் இங்கு வர வேண்டும் என்பது அர்த்தமல்ல. அனைத்து மதத்தினருக்கு அன்னையாக உள்ளார். மைசூரு தசராவுக்கு வெளிநாட்டினரும், மற்ற மதத்தினரும் வருகை தருகின்றனர். மஹாராஜா காலத்திலும் வெளிநாட்டினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பானு முஷ்டாக்கிற்கு மட்டும் ஏன் அனுமதியில்லை. நீர், சூரியன், கடவுளுக்கு மதம் இல்லை. மசூதி, கிறிஸ்துவ தேவாலயங்கள், ஜெயினரின் குமட்டகிரிக்கு வரக்கூடாது என்று அவர்கள் கூறுகின்னரா? யதுவீர் பா.ஜ.,வில் இணைந்ததால், வரலாற்றை மறந்து விட்டார். கிரஹலட்சுமி திட்டத்தின் மூலம், பல பெண்கள் சாமுண்டியை தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து மதத்தினருக்கும் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இவ்விஷயத்தில் ஜாதி, மதம் சாயம் பூச வேண்டாம். நாங்கள் பா.ஜ., வினரை விட ஹிந்துத்துவா மீது மதிப்பு வைத்துள்ளோம். ம.ஜ.த., எப்போதும் போலி தான். என்னை கட்சி மேலிடம் நீக்கியதாக அவர்களின் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களால் என்ன செய்ய முடியுமோ செய்யட்டும். அவர்களின் பெரிய தலைவரை பார்த்தே எனக்கு பயமில்லை. அதேவேளையில், இதுபோன்று அவர்கள் செயல்படுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி