ராஜண்ணாவை டிஸ்மிஸ் செய்தது தலித்களுக்கு அவமதிப்பு: நிகில்
தாவணகெரே: ''ராஜண்ணாவை, அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது, எஸ்.சி. - எஸ்.டி., சமூக மக்களுக்கு செய்யும் அவமதிப்பாகும்,'' என, ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார். தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி: எஸ்.சி. - எஸ்.டி., மக்களுக்கு சமூக நீதி கிடைக்க பாடுபடுவது காங்கிரஸ் மட்டுமே என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். அச்சமுதாயத்தை சேர்ந்த ராஜண் ணா, அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர். அவரே தன் பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்திருக்கும் அமைச்சர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஜனநாயகம், அரசியலமைப்பு பற்றி வாய்கிழிய பேசும் காங்கிரசின் உள்ளே ஜனநாயகம் இல்லை. உண்மையை பேசிய ராஜண்ணா, பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அவர் பேசியதில் என்ன தவறு? உள்ளாட்சி தேர்தல் உட்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும். மாநிலம், மாவட்டம், தாலுகா அளவில் ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்க, பா.ஜ., மேலிடம் சாதகமாக முடிவை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இருகட்சி தொண்டர்களையும் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. கட்சி தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது சுலபம். இவ்வாறு அவர் கூறினார்.