உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜனவரியில் மாவட்டம், தாலுகா கிராம பஞ்சாயத்து தேர்தல்

ஜனவரியில் மாவட்டம், தாலுகா கிராம பஞ்சாயத்து தேர்தல்

ஷிவமொக்கா: ''ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மாவட்டம், தாலுகா, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படலாம்,'' என, கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார். ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, மாநில அமைச்சரவையில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு உள்ளது. தொகுதிக்கான இட ஒதுக்கீடு பட்டியலை நாங்கள் வெளியிட்டு உள்ளோம். ஆட்சேபனைகள் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை 1,800 ஆட்சேபனை விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. ஒரு வாரத்துக்குள் அனைத்த ஆட்சேபனைகளையும் நாங்கள் பரிசீலித்து, இம்மாத இறுதிக்குள் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். பின், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்கும். மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஓட்டுச்சீட்டுகள் மூலம் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அனைத்து ஏற்பாடுகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கு ஒன்றரை மாதங்கள் தேவைப்படும். எனவே, ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்திற்குள் தேர்தல் நடக்கும். வறட்சி மேலாண்மைக்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளை செய்துள்ளோம். மாநிலத்தில் குடிநீருக்கு 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தவிர, மாவட்ட கலெக்டரின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனால், 24 மணி நேரத்திற்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தனியார் ஆழ்துளை கிணறுகள் அல்லது குடிநீர் டேங்கர்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வறட்சியை சமாளிக்க, மாநிலம் முழுதும் நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம். வறட்சி மேலாண்மைக்கு நிதி பற்றாக்குறை இல்லை. இது குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். மாநிலம் முழுதும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி