ஓசி பஸ் பயணம் வேண்டாம்! டிக்கெட் எடுக்கும் பெண்
பெங்களூரு: 'ஓசி' பயணம் எனக்கு வேண்டாம். பஸ்சில் டிக்கெட் எடுத்துக் கொண்டே பயணம் செய்கிறேன். இலவசம் மூலம் மாநிலத்திற்கு சுமை ஏற்படுத்த விரும்பவில்லை' என, 'எக்ஸ்' பக்கத்தில் பெண் பதிவிட்டுள்ளார். கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'சக்தி' திட்டத்தை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமல்படுத்தியுள்ளது. ஆதார் அட்டையை காண்பித்து எங்கு செல்ல வேண்டும் என, கண்டக்டரிடம் கூறி, அதற்கான பிரத்யேக டிக்கெட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும். இந்த திட்டத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு பெண்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இதனால் கோவில்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக, ஹிந்து அறநிலையத்துறையையும் தன் வசம் வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகிறார். இந்நிலையில் சஹானா ஹோலிமத் என்ற பெண், தன் 'எக்ஸ்' பக்கத்தில், சவுந்தட்டியில் இருந்து பெலகாவிக்கு அரசு பஸ்சில் 115 ரூபாய் கொடுத்து எடுத்த டிக்கெட்டை பதிவிட்டு இருந்தார். 'டிக்கெட் எடுத்து பஸ்சில் பயணம் செய்வதால் எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. டிக்கெட் கொடுக்கும்போது நடத்துநர் என்னிடம் கேட்டார். ஏன், உங்களிடம் ஆதார் அட்டை இல்லையா என்று. அதற்கு நான், 'இலவச பயணம் எனக்கு வேண்டாம்; இதுவரை இலவச பயணம் செய்தது இல்லை' என்று கூறினேன். இலவச திட்டங்கள் மூலம், என் மாநிலம் மற்றும் நாட்டிற்கு சுமை ஏற்படுத்த விரும்பவில்லை' என, பதிவிட்டு உள்ளார். இந்த பதிவை ஆயிரக்கணக்கானோர் மறுபதிவிட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய சிலரிடம், விருப்பம் உள்ளவர்கள், பணம் கொடுத்து அரசு பஸ்சில் பயணம் செய்யும்படி, சஹானா ஹோலிமத் அழைப்பு விடுத்துள்ளார்.