| ADDED : நவ 19, 2025 08:20 AM
மாண்டியா: ஏறக்குறைய 20 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்து மேலே வர முடியாமல் மூன்று நாட்களாக தவித்த யானையை, மயக்க ஊசி போட்டு, ராட்சத கிரேன் மூலம் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா, சிவனசமுத்ரா அருவிக்கு அருகே தனியார் நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு தண்ணீர் செல்வதற்கு 20 அடி ஆழம் கொண்ட கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் குடிக்க, 10 வயது காட்டு யானை இறங்கியது. ஆனால், மீண்டும் மேலே வருவதற்கு வழி தெரியாமல் அலைந்து திரிந்தது. கடந்த சனிக்கிழமை முதல் சுற்றித்திரிந்த யானையை பார்த்த சிலர், தானாக மேலே ஏறிவிடும் என நினைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால், திங்கட்கிழமையும் கால்வாயிலேயே யானை சுற்றித் திரிவதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானையை அங்கிருந்து விரட்ட முயன்றனர். இந்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை. இதனால், யானைக்கு உணவுகளை வழங்கினர். கால்வாயில் ஓடிய தண்ணீரின் அளவை குறைத்தனர். யானையை மீட்கும் முயற்சிகள் பலனளிக்காததால், 'ஆப்பரேஷன் காட்டு யானை' எனும் பெயரில் அதிகாரிகள் யானையை மீட்க திட்டமிட்டனர். மயக்க ஊசி, பட்டாசு, ராட்சத கிரேன், பொக்லைன், 30க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் என, ஒரு படையே சம்பவ இடத்திற்கு வந்தது. முதலில், பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயன்றனர். இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அடுத்ததாக, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. யானைக்கு துப்பாக்கி மூலம் இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. யானை மயங்கி விழுந்தது. இதையடுத்து, ராட்சத கிரேன் மூலம் பெல்ட்டுகள் கட்டி, பெரிய அளவிலான இரும்பு தகட்டில் யானையை வைத்து மேலே துாக்கப்பட்டது. ஒரு வழியாக யானை மேலே கொண்டு வரப்பட்டது. பின், லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது. யானையை ஹலசூரு வனப்பகுதியில் விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். � கால்வாயில் விழுந்த யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய வன அதிகாரிகள். � கிரேன் மூலம் துாக்கப்பட்ட யானை.