தன் காதலியுடன் பேசியதால் ஆத்திரம் வாலிபரை ரயிலில் தள்ளி கொன்றார் நண்பர்
தொட்டேனகுந்தி: தன் காதலியுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியதால், ரயிலில் தள்ளி வாலிபரைக் கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜயபுராவை சேர்ந்தவர் இஸ்மாயில் படவேகர், 20. பெங்களூரு தொட்டேனகுந்தியில் பி.ஜி.,யில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு, தொட்டேனகுந்தி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இஸ்மாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது ரயிலில் அடிபட்டு இஸ்மாயில் இறந்ததாக, அவரது நண்பர் புனித், 21, பையப்பனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். 'கிடுக்கிப்பிடி' விசாரணையில் இஸ்மாயிலை, தன் இன்னொரு நண்பர் பிரதாப், 21, என்பவருடன் சேர்ந்து, ரயிலில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். புனித் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியது: இஸ்மாயிலும், புனித், பிரதாப் ஆகிய மூவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். பி.ஜி.,யிலும் ஒன்றாக தங்கி இருந்தனர். புனித்தும், இளம்பெண் ஒருவரும் காதலித்தனர். அந்த இளம்பெண்ணின் மொபைல் நம்பரை புனித்திடம் இருந்து இஸ்மாயில் வாங்கினார். இளம்பெண்ணுடன் மொபைல் போனில் அடிக்கடி பேசினார். கோபம் அடைந்த புனித், 'என் காதலியுடன் பேசக் கூடாது' என்று இஸ்மாயிலை எச்சரித்தார்; அவர் கேட்கவில்லை. இந்த விஷயத்தில் கடந்த 6ம் தேதி இரவு இஸ்மாயிலுடன், புனித்தும், பிரதாப்பும் தகராறு செய்தனர். பின், பி.ஜி.,யில் இருந்து புனித்தும், பிரதாப்பும் வெளியே சென்றனர். மது வாங்கிக் கொண்டு ரயில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து குடித்தனர். அங்கு இஸ்மாயில் வந்தார். மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த புனித்தும், பிரதாப்பும், அந்த வழியாக வந்த ரயிலில் இஸ்மாயிலை பிடித்துத் தள்ளினர். ரயில் மோதியதில் துாக்கி வீசப்பட்டு இஸ்மாயில் இறந்தார். அவரது உடலை துாக்கி மீண்டும் தண்டவாளத்தில் போட்டனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது, ரயிலில் அடிபட்டு இஸ்மாயில் இறந்ததாக நாடகமாடியது தெரிந்தது. தலைமறைவாக உள்ள பிரதாப்பை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.