பயணியரிடம் பணம் வாங்கிய போலி டிக்கெட் பரிசோதகர் கைது
மைசூரு: டிக் கெட் பரிசோதகர் என கூறி, ரயில் பயணியரிடம் பணம் பறிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார். தென்மேற்கு ரயில்வே துணை டிக்கெட் பரிசோதகர் யஷ்வந்த், அரசு ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதில், ஜூன் 1ம் தேதி ரயில் எண் 12089 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஷிவமொக்கா டவுன் ஜன் சதாப்தி விரைவு ரயிலின் சி - 1 பெட்டியில், நபர் ஒருவர் டிக்கெட் பரிசோதகர் என கூறி, பயணியரிடம் பணம் கேட்டு கொண்டிருந்தார். அந்த நபரிடம் விசாரித்தபோது, டிக்கெட் பரிசோதகர் என்று தெரிவித்தார். ஆதாரத்தை கேட்டபோது, தனது மொபைல் போனில் இருந்த போலி அடையாள அட்டையை காண்பித்தார். அவரை பிடித்து விசாரித்த போது, ஷிவமொக்காவை சேர்ந்த ரகிபுத்தின், 26, என்பது தெரிந்தது. இதையடுத்து, அரிசிகெரே அரசு ரயில்வே போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.