அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட விவசாயி ரூ.10 லட்சம் நன்கொடை
துமகூரு: அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட, 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்த விவசாயிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.துமகூரு, குப்பி தாலுகாவில் உள்ள சிக்கச்செங்கவி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ், 52. இவர் தன் கிராமத்தின் தம்மூர் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மோசமான நிலையில் இருப்பதை பார்த்து மனமுடைந்தார்.இதை சரிசெய்ய நினைத்தார். இதற்காக, தன்னிடமிருந்த 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார். இதை வைத்து, பள்ளியில் கணினி வசதியுடன் கூடிய நவீன வகுப்பறை கட்டப்பட்டது. பள்ளியில் உள்ள கழிப்பறைகள் சீர்செய்யப்பட்டன. இது பள்ளிக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தியது.இதனால், 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இவர் நன்கொடை செய்தது முக்கிய காரணமானது.இவ்வளவு பெரிய உதவியை செய்த பிரகாஷ், தன் பெயரை கல்வெட்டுகளில் எதுவும் குறிப்பிடவில்லை என்பது சிறப்பு. அவரின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''பணக்கார வீட்டு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பது போல, என் கிராமத்தில் உள்ள குழந்தைகளும் தரமான கல்வி பயில வேண்டும். அதற்காகவே நன்கொடை அளித்தேன்,'' என்றார்.