மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருந்தவருக்கு அபராதம்
பெங்களூரு: பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயிலில் இருந்து இறங்கிய பயணியர், ரயில் நிலையத்திற்குள் 20 நிமிடத்திற்கு மேல் இருக்க கூடாது என்றும், அப்படி இருந்தால் அவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இதுபற்றி தெரியாமல் நிறைய பேர், அபராதம் கட்டி வருகின்றனர். இந்த நடைமுறை ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா புதிய வழித்தடத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இதுபற்றி பயணியருக்கு தெரியவில்லை. நேற்று முன்தினம் பயணி ஒருவர், சில்க் போர்டில் இருந்து ஆர்.வி.ரோடு செல்ல டிக்கெட் எடுத்து இருந்தார். 25 நிமிடம் அவர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பின், ரயில் வந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரயிலில் ஏறவில்லை. இதனால் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல வந்தார். அவரை தடுத்து நிறுத்திய மெட்ரோ ஊழியர்கள், ரயில் நிலையத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் இருந்ததற்காக 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறினர். ரயிலில் ஏற முடியாதது பற்றி, பயணி எடுத்து கூறியும், மெட்ரோ ஊழியர்கள் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த பயணி 50 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு சென்றார்.