| ADDED : அக் 06, 2025 05:57 AM
பேகூர் : பிளாஸ்டிக் பொருட்களை குவித்து வைத்திருந்த இடத்தில், தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு பேகூரில் இருந்து கொப்பா செல்லும் சாலையில், அக் ஷய் நகரில் உள்ள கிட்டங்கி அருகே, பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 1:00 மணியளவில், பிளாஸ்டிக் பொருட்கள் குவியலில் தீப்பிடித்தது. தீ மளமளவென வேகமாக பரவி எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், மூன்று தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்கள், அங்கு நின்ற சரக்கு ஆட்டோ தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பேகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.