வனவிலங்குகளுக்கு தொட்டியில் தண்ணீர் ஊற்றும் வனத்துறை
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் உள்ள வனப்பகுதிகளில் தண்ணீர் தேடி அலையும் விலங்குகளுக்கு, தொட்டி அமைத்து தண்ணீர் ஊற்றும் பணியை மாவட்ட வனத்துறை துவங்கி உள்ளது. ஹூப்பள்ளி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி வனப்பகுதியில் வாழும் விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அலையும் சூழல் உருவாகி உள்ளது. தார்வாட், கலகட்டகி, அல்னாவர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன. அதுமட்டுமின்றி, அடுத்த இரண்டு மாதங்களில் வனத்தில் உள்ள நீர்நிலைகளும் முழுமையாக வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்ட மாவட்ட வனத்துறையினர், இந்த மூன்று தாலுகாக்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், ஆங்காங்கே சிமென்டால் ஆன சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகளை நிறுவினர்.இதில், தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை நிரப்பி வருகின்றனர். இதனால், பறவைகள், குரங்குகள் போன்ற வன விலங்குகள் பெரிதும் பயனடைகின்றன. வனத்துறையின் இந்நடவடிக்கைக்கு பலரும் பாரட்டு தெரிவித்துள்ளனர்.