உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் மாஜி ஈ.டி., அதிகாரிக்கு சிறை

ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் மாஜி ஈ.டி., அதிகாரிக்கு சிறை

பெங்களூரு: வழக்கை முடித்து வைக்க ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு, சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்க அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் லலித் பஜாத். இவர் கடந்த 2021ல் பணியில் இருந்தபோது, சீன செயலி மூலம் கடன் கொடுத்ததில் நடந்த மோசடி தொடர்பாக, தொழிலதிபர் நிகில் இன்னானி என்பவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, “இந்த வழக்கை முடித்து வைக்க, ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுங்கள்,” என, நிகிலிடம், லலித் பஜாத் கூறி உள்ளார். இதற்கு முதலில் ஒப்புக் கொண்ட நிகில் பின் மனம் மாறினார். சி.பி.ஐ.,யில் லலித் மீது புகார் அளித்தார். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி ஜெயநகரில் உள்ள பப்பில் வைத்து, லலித்திடம், நிகிலின் உறவினர் ஹரிஷ் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், லலித்தை கையும் களவுமாக கைது செய்தனர். அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சாட்சிகளை சேகரித்த பின், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் 2021 டிசம்பர் 20ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மஞ்சுநாத் சங்கரேஷி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். லலித் லஞ்சம் வாங்கியது ஆதாரங்கள் மூலம் உறுதியாகி இருப்பதாக கூறிய நீதிபதி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை