காங்கிரசுக்கு மாஜி அமைச்சர் ராஜண்ணா... குட்பை? : விரைவில் முடிவு என மேலிடத்துக்கு மிரட்டல்
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில், கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜண்ணா. கட்சியின் மூத்த தலைவரான இவர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார். மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக கூறி, கட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாகிறார். இவருக்கு நீண்ட காலமாக, மாநில தலைவர் பதவி மீது கண் இருந்தது. இதே காரணத்தால், 'மாநிலத்தில் மூன்று துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும். சமுதாய வாரியாக வாய்ப்பளிக்க வேண்டும்' என, பிடிவாதம் பிடித்தார். இதற்கு மேலிடம் செவி சாய்க்கவில்லை. அதன்பின், 'மாநிலத்தில் முதல்வர் மா ற்றப்பட வேண்டும்' என, குரல் கொடுத்தார் . 'நவம்பர் புரட்சி' என்ற பீதியை ஆரம்பித்து வைத்ததே இவர்தான். 'முதல்வர் பதவி குறித்து, வாய் திறக்க கூடாது' என, மேலிடம் உத்தரவிட்ட பின், மற்ற தலைவர்கள் மவுனமாகினர். ஆனால் ராஜண்ணா அவ்வப்போது முதல்வர் மாற்றம், மாநில தலைவர் மாற்றம் பற்றி பேசி, எரிச்சலை கிளப்பினார். இதற்கிடையே, தன்னை, 'ஹனிடிராப்'பில் சிக்க வைக்க முயற்சிப்பதாக, சட்டசபையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன், இதன் பின்னணியில், சொந்த கட்சியினரே இருப்பதாக சந்தேகம் தெரிவித்தார். இது, கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஓட்டு திருட்டு விஷயத்தில், பா.ஜ.,வை நெருக்கடியில் சிக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்தது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளை திருடி, பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்ததாக குற்றம்சாட்டினார். பெங்களூருக்கு வந்து போராட்டமும் நடத்தி சென்றார். அதன்பின் கர்நாடகாவின் மற்ற தலைவர்கள், இதே விஷயத்தை வைத்து பா.ஜ., காலை வாரினர். இது தொடர்பாக, கையெழுத்து சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ராஜண்ணாவோ, 'காங்கிரஸ் அரசு இருக்கும் போதே, ஓட்டு திருட்டு நடந்துள்ளது. அப்போது வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது போராட்டம் நடத்துகின்றனர். நம் கண் முன்னே முறைகேடு நடந்த போது, ஏன் தடுக்கவில்லை' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற மேலிடம், ராஜண்ணாவை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டது. இதன்படி அவரும், ராஜண்ணாவிடம் ராஜினாமா கடிதம் வாங்கி, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். பதவி பறிபோனாலும், ராஜண்ணா அமைதியாக இல்லை. இம்மாதம் 20ம் தேதியுடன் காங்., அரசு பதவியேற்று இரண்டரை ஆண்டு நிறைவடைகிறது. அமைச்சரவையை மாற்றியமைக்க மேலிடம், ஆர்வம் காட்டுகிறது. அப்போது, தன்னை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என, ராஜண்ணா எதிர்பார்க்கிறார். ஒருவேளை தன்னை அலட்சியப்படுத்தினால், கட்சிக்கு முழுக்கு போடவும் தயாராகிறார். தான் இல்லாவிட்டால், துமகூரில் காங்கிரஸ் கதை முடியும் என, பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக, துமகூரில் தொண்டர்கள் கூட்டத்தில், நேற்று ராஜண்ணா பேசியதாவது: இதற்கு முன் நான் காங்கிரசை விட்டு விலகிய போது, கட்சி தோற்று மண்ணை கவ்வியது. இப்போது மீண்டும் அதே சூழ்நிலை ஏற்படலாம். வரும் நாட்களில் எந்த கொடியை நான் பிடிக்க வேண்டும் என்பதை, என் தொகுதி மக்கள் முடிவு செய்வர். இதற்கு முன் பெள்ளாவி தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வானேன். அப்போது காங்கிரஸ் என்னை மதிக்கவில்லை. எனவே, 2004ல் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டேன். அப்போது மாவட்டத்தில், காங்கிரசை முற்றிலுமாக, 'வாஷ் அவுட்' செய்தோம். அக்கட்சியின் கதையை முடித்தோம். கட்சிக்கு மீண்டும் அதே சூழ்நிலை வரக்கூடும். அடுத்த தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என, ஆலோசிக்கிறேன். அரசியலில் யாரும் நிரந்தர எதிரிகளும் அல்ல; நண்பர்களும் அல்ல. கட்சி பாகுபாடின்றி பணியாற்றுகிறேன். மக்களின் ஆசியே எனக்கு யானை பலம். மக்களை நம்பி அரசியலுக்கு வந்தவன் நான். வரும் நாட்களில் நான் வேறு கட்சியின் கொடியை பிடித்தாலும் பிடிக்கலாம்; பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். 'இதன் வாயிலாக, தனக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், காங்., கட்சிக்கு முழுக்கு போட்டு விட்டு, வேறு கட்சிக்கு தாவுவேன்' என, மேலிடத்திற்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.