புர்காவை கழற்றுமாறு மிரட்டிய நால்வர் கைது
சந்திரா லே - அவுட் : ஹிந்து நண்பருடன் பேசி கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணின் புர்காவை கழற்றுமாறு கூறி மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.பெங்களூரு, சந்திரா லே - அவுட் பகுதியில் உள்ள பார்க்கில் சில தினங்களுக்கு முன் முஸ்லிம் பெண்ணும், ஹிந்து ஆணும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிலர், முஸ்லிம் பெண்ணின் முகவரியை கேட்டு மிரட்டினர். மேலும், அவருடைய புர்காவை கழற்றுமாறு கூறி தொல்லை கொடுத்தனர். அப்பெண், 'என்னை விட்டு விடுங்கள்' என பல முறை கெஞ்சி, ஆண் நண்பரின் பின் ஒளிந்து கொண்டார். இருப்பினும், அக்குழுவினர் அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அதிலும், ஒருவர், 'நீ நரகத்திற்கு கட்டாயம் போ, ஆனால், உன் புர்காவை கழற்றி கொடுத்துவிட்டு போ' என திட்டினார்.இந்த அனைத்து சம்பவங்களையும், அக்குழுவினர் மொபைலில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது இணையத்தில் பரவியது. 'முஸ்லிம் பெண்ணை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, முஸ்லிம் பெண்ணின் குடும்பத்தினர் சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், பெண்ணை மிரட்டிய சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.பெங்களூரு போலீஸ் மேற்கு டி.சி.பி., கிரிஷ் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் மைனர். விசாரணை நடந்து வருகிறது. வாக்குமூலம் பெற்ற பின், அவர்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படும்,'' என்றார்.