தார்வாட்: ஒரே குடும்பத்தின் நால்வர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து, தார்வாட் எஸ்.பி., குஞ்சன் ஆர்யா அளித்த பேட்டி: தார்வாட் நகரின் சிக்கமல்லிகவாடா கிராமத்தில் வசித்தவர் விட்டல்ராவ் சிந்தே, 85. இவரது மகன் நாராயண சிந்தே, 42. மருமகள் ஷில்பா, 38. தம்பதிக்கு சிவராஜ், 12, என்ற மகனும், ஸ்ரீநிதி, 10, என்ற மகளும் இருந்தனர். நாராயண சிந்தே பேக்கரி ஒன்றில் பணியாற்றினார். இவர் நேற்று காலை, 9:30 மணியளவில், தன் தந்தை, இரண்டு பிள்ளைகளுடன் ஒரு பைக்கில் சென்றனர். கோவிலுக்கு செல்வதாக கிராமத்தினர் நினைத்தனர். ஆனால் நாராயண சிந்தே, தன் தந்தை, பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நால்வரின் உடல்களும் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இவர்களின் தற்கொலைக்கு அதிக கடன் தொல்லையே காரணம் என, தெரிகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே, தெளிவான காரணம் தெரியும். சம்பவம் நடந்தபோது, நாராயண சிந்தேவின் மனைவி ஷில்பா, பணிக்கு சென்றிருந்தார். இவ்வாறு அவர் கூறினார். ஷில்பா கூறியதாவது: எங்கள் வீடு கடனில் உள்ளது. இரண்டு லட்சம் ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. பணத்தை புரட்ட முடியவில்லை. இதனால் என் கணவரும், மாமனாரும் வருத்தத்தில் இருந்தனர். நான் தைரியம் கூறினேன். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், நானும் வேலைக்கு செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.