உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்ப பெங்களூரில் சதி சின்னையாவை பலிகடாவாக்கி தப்பிக்க பார்க்கும் கும்பல்

தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்ப பெங்களூரில் சதி சின்னையாவை பலிகடாவாக்கி தப்பிக்க பார்க்கும் கும்பல்

தர்மஸ்தலாவில் இன்று மாநாடு

'தர்மஸ்தலாவை பாதுகாப்போம்' என்ற பெயரில், தர்மஸ்தலாவில் இன்று பா.ஜ., சார்பில் மாநாடு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அங்கு செய்யப்பட்டு உள்ளன. தலைவர்களை வரவேற்கும் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. வழிநெடுக காவி கொடியும் பறக்கவிடப்பட்டு உள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த.,வும், வீரேந்திர ஹெக்டேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. ஹாசனில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட வாகனங்களில், ம.ஜ.த., தொண்டர்கள் தர்மஸ்தலா சென்றனர். வாகன பேரணியை ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் துவக்கி வைத்தார். அவரும் தர்மஸ்தலா சென்று வீரேந்திர ஹெக்டேயை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றார்.

சசிகாந்த் செந்திலை கைது செய்யுங்க

பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா கூறுகையில், ''தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலை கைது செய்தால், தர்மஸ்தலா வழக்கின் உண்மை தெரிந்து விடும். காங்கிரஸ் ஹிந்து விரோதி. காவியை பார்த்தாலே அவர்களுக்கு அலர்ஜி. ஹிந்துக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சியை தொடர்ந்து செய்கின்றனர்,'' என்றார். பெங்களூரு, செப். 1-தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில், வீரேந்திர ஹெக்டேயின் குடும்பத்தினர் பற்றி அவதுாறு பரப்ப, பெங்களூரில் உள்ள லாட்ஜில் சதி நடந்தது தெரியவந்ததால், கைதான சின்னையாவை எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர். எங்கள் மீதும் எந்த தவறும் இல்லை; சின்னையா தான் தவறு செய்தார் என்று கூறி, அவரை பின்னாள் இருந்து இயங்கிய கும்பல் தப்பிக்க பார்க்கிறது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த, மாண்டியா சிக்கப்பள்ளியின் சின்னையாவை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை பின்னால் இருந்து இயக்கியது ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, அவரது நெருங்கிய ஆதரவாளர் கிரிஷ் மட்டன்னவர், சமூக ஆர்வலர் ஜெயந்த் என தெரிவித்தார். மகேஷ் திம்மரோடி வீட்டில் சோதனை நடத்திய, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அங்கிருந்து, சின்னையாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் ஆகியோருக்கு, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பவும் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில், கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே குடும்பத்தினர் பற்றி அவதுாறு பரப்ப, பெங்களூரில் சதி திட்டம் தீட்டியது பற்றி, எஸ்.ஐ.டி.,க்கு தெரியவந்தது. ஆதாரம் சேகரிப்பு இதனால் நேற்று முன்தினம் பீன்யாவில் உள்ள, ஜெயந்த் வீட்டிற்கு சின்னையாவை அழைத்து சென்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஜெயந்த் இல்லை. அவரது மனைவி, பிள்ளைகள் மட்டும் இருந்தனர். அவர்களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்து தகவல் பெற்று கொண்டனர். ஜெயந்த் வீட்டை தவிர, வித்யாரண்யபுரா திண்ட்லு சதுக்கத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில், சின்னையா ஐந்து மாதங்கள் தங்கி இருந்ததும், அந்த லாட்ஜில் சின்னையாவை, மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், சுஜாதா பட் ஆகியோர் சந்தித்ததும் தெரிந்தது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு லாட்ஜிற்கு சின்னையாவை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜ் லெட்ஜர் புக், கண்காணிப்பு கேமரா டி.வி.ஆர்., உள்ளிட்டவைகளை ஆதாரங்களாக சேகரித்து கொண்டனர். பின், அவரை மீண்டும் தர்மஸ்தலாவுக்கு அழைத்து சென்றனர். சின்னையாவின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் காவலில் எடுக்க எஸ்.ஐ.டி., தயாராகி வருகிறது. சுஜாதா பட் சாபம் இதற்கிடையில் தர்மஸ்தலா சென்று மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, போலீசில் பொய் புகார் அளித்த சுஜாதா பட், தான் அளித்த புகாரை திரும்ப பெற போவதாகவும், கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த்தை நம்பி ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறி உள்ளார். அவர்கள் இருவருக்கும் தகுந்த நேரத்தில் தண்டனை கிடைக்கும் எனவும் சாபமிட்டு உள்ளார். ஜெயந்த் கூறுகையில், ''கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக சின்னையாவை சந்தித்தேன். கிரிஷ் மட்டன்னவர் கூறியதால், பெங்களூரில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் சின்னையாவை பிக்அப் செய்தேன். அவரை ஒரு வக்கீலிடம் அழைத்து சென்றேன். எனது வீட்டில் அவரை தங்க வைத்தேன். அப்போது அவரிடம் எலும்பு கூடு, மண்டை ஓடு எதுவும் இல்லை. என்ன காரணத்திற்காக பெங்களூரு வந்து உள்ளீர்கள் என்று கேட்டேன். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. பின், அவரிடம் எதுவும் கேட்கவில்லை. என் வீட்டில் இருந்து தர்மஸ்தலா சென்றார். பின், மீண்டும் பெங்களூரு வந்தார். பெங்களூரில் இருந்து காரில் டில்லிக்கு அழைத்து சென்றோம். தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்களை புதைத்தது பற்றி, உச்ச நீதிமன்றத்தில் சின்னையாவை வாக்குமூலம் அளிக்க வைக்க நினைத்தோம். அது நடக்கவில்லை. எங்களிடம், பெண்கள் உடல்களை புதைத்தது உண்மை என்று கூறினார். போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது இடத்தை மாற்றி காட்டி உள்ளார். என்ன நடக்கிறது என்று எங்களுக்கே தெரியவில்லை,'' என்றார். சின்னையா மாற்றி, மாற்றி பேசுவதாக சில தினங்களுக்கு முன்பு, கிரிஷ் மட்டன்னவரும் கூறி இருந்தார். இவர்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, சின்னையா தான் வழக்கின் சூத்திரதாரி என்று கூறி, அனைவரும் தப்பிக்க முயற்சி செய்வது தெளிவாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை