ஸ்கூட்டரில் இருந்து விழுந்த சிறுமி பி.எம்.டி.சி., பஸ் டயரில் சிக்கி பலி
எலஹங்கா: பள்ளிக்குச் சென்றபோது, ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த சிறுமி, பி.எம்.டி.சி., பஸ் டயரில் சிக்கி உயிரிழந்தார். பெங்களூரு, எலஹங்கா கோகிலு கிராசில் வசிப்பவர் ஹர்ஷிதா. இவரது மகள் தன்வி, 10. தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். நேற்று காலை 8:30 மணிக்கு தாய் ஹர்ஷிதாவுடன், ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றார். ஒரு திருப்பத்தில் ஸ்கூட்டர், ஹர்ஷிதா கட்டுப்பாட்டை இழந்தது. ஸ்கூட்டரில் இருந்து தன்வி சாலையில் விழுந்தார். பின்னால் வந்த பி.எம்.டி.சி., பஸ், தன்வி மீது ஏறி, இறங்கியது. இதை கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கினார். பயணியர் அலறியதால் பஸ்சை நிறுத்தினார். டிரைவர், பயணியர் இறங்கிச் சென்று பார்ப்பதற்குள் தன்வி உயிரிழந்து விட்டார். தன் கண் முன் மகள் இறந்ததை கண்டு ஹர்ஷிதா கதறி அழுதார். இது அங்கிருந்தோரையும் கண்கலங்க வைத்தது. விபத்துக்கு காரணமான பி.எம்.டி.சி., பஸ்சை, எலஹங்கா போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.