சாலை விபத்தில் 4 இளைஞர்கள் பலி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது அரசு
சிக்கபல்லாபூர்: பைக் மீது டிப்பர் லாரி மோதியதில், அண்ணன், தம்பி உட்பட நான்கு இளைஞர்கள் பலியாகினர். சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷால் சவுக்சே, நேற்று அளித்த பேட்டி: சிக்கபல்லாபூர் நகரின் அஜ்ஜவாரா கேட் அருகே நேற்று முன் தினம் நள்ளிரவு, ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பைக் சாலையின் வலது புறம் திரும்பும் போது, எதிரே வந்த டிப்பர் மீது மோதியது. இதில், பைக்கில் பயணித்த நரசிம்ம மூர்த்தி, 27, அவரது தம்பி நந்தீஷ், 25, நண்பர்கள் அருண், 18, மனோஜ், 19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்த நால்வரும், அஜ்ஜவாரா கிராமத்தை சேர்ந்தவர்கள். ஒரே பைக்கில் நால்வரும் சிக்கபல்லாபூருக்கு சென்று விட்டு, மீண்டும் கிராமத்துக்கு திரும்பும் போது, விபத்து நடந்தது. டிப்பர் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். போக்குவரத்து விதிமுறை மீறப்பட்டுள்ளது. தவறு யாருடையது என்பதை தெரிந்து கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். விபத்தில் இறந்த நரசிம்மமூர்த்திக்கு, ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. முதல்வர் சித்தராமையா, 'எக்ஸ்' வலை தளத்தில் கூறியுள்ளதாவது: அஜ்ஜவாரா கிராமம் அருகே நடந்த சாலை விபத்தில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருந்தினேன். மகன்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.