ஹோம் ஸ்டேக்களுக்கு புதிய விதிகள் விரைவில் அமல்படுத்த அரசு முடிவு
பெங்களூரு : கொப்பாலில், வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், இதை தடுக்க வந்த ஒடிசா வாலிபர், கால்வாயில் தள்ளி விடப்பட்டு பலியான சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள ஹோம் ஸ்டேக்களுக்கு, சுற்றுலா துறை புதிய வழிகாட்டுதல்களை அறிவிக்க உள்ளது.கொப்பால் மாவட்டம், கங்காவதியில், கடந்த மாதம் தனியார் ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்த இஸ்ரேலிய பெண் மற்றும் விடுதி உரிமையாளரான பெண் இருவரும் மூன்று பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதை தடுக்க முயன்ற ஒடிசா வாலிபரை கால்வாயில் தள்ளி விட்டதில், அவர் பலியானார்.தற்போது சுற்றுலா துறை, ஹோம் ஸ்டேக்கள், ரிசார்ட்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவிக்க தயாராகி வருகிறது. புதிய விதிமுறைகளில் உள்ள அம்சங்கள்:குடகு, ஹாசன், சக்லேஸ்புரா, மங்களூரு உட்பட பகுதிகளில் ஏராளமான ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. இதன் உரிமையாளர்கள் பலரும், மாநிலத்தின் வேறு இடத்தில் அமர்ந்து கொண்டு, மேலாளர்கள் மூலம், இதை நிர்வகித்து வருகின்றனர். ஓனருக்கு கிடுக்கி
இனி, ஹோம் ஸ்டேக்களை, உரிமையாளர்கள் அங்கேயே தங்கி, சுற்றுலா பயணியரை வரவேற்க வேண்டும். வெளியூரில் அமர்ந்து கொண்டு இதை நிர்வகிக்க கூடாது. விதிகளை பின்பற்றவில்லை என்றால், இவைகள் ரிசார்ட்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.இங்கு உரிமையாளர் அறையை தவிர, ஆறு அறைகள், 12 படுக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஹோம் ஸ்டேக்களுக்கான பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.ஹோம் ஸ்டேக்கள் பதிவு செய்ய வேண்டுமானால், மாவட்ட மாஜிஸ்திரேட் பொறுப்பு வகிக்கும் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., சுற்றுலா துறை துணை இயக்குனரின் ஒப்புதல் இருக்க வேண்டும். ஹோம் ஸ்டேக்களின் சொத்து விபரம், உரிமையாளர், பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.இந்த புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை, சுற்றுலா துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், முதல்வர் சித்தாரமையாவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.