உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கலைகள் மூலம் ஒற்றுமையை வலுப்படுத்த கவர்னர் அழைப்பு

கலைகள் மூலம் ஒற்றுமையை வலுப்படுத்த கவர்னர் அழைப்பு

பெங்களூரு: ''கலையின் நோக்கம் அதை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, சமூகத்தில் அறிவு திறன், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாகும். இந்திய கலாசாரத்தில் இசை மற்றும் கலை மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது,'' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார். மைசூரில் கங்குபாய் ஹங்கல் இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மாணவ - மாணவியருக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கிய பின், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது: கலையின் நோக்கம் அதை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, சமூகத்தில் அறிவு திறன், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாகும். இந்திய கலாசாரத்தில் இசை மற்றும் கலை மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. நம் வேதங்கள், 'நாதோஸ்மி பரம் பிரம்மம்' என்று கூறுகின்றன. அதாவது, ஒலி என்பது பரம ஆன்மா. இந்த ஒலி, மனிதர்களில் மறைந்திருக்கும் அழகு, இரக்கம், அன்பை எழுப்பும் சக்தி உள்ளது. இசை இதயத்தை மென்மையாக்குகிறது. எண்ணங்களை துாய்மைப்படுத்துகிறது; ஆன்மாவை உயர்த்துகிறது. சமூகம் பல சவால்களை எதிர்கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், மனிதர்களிடையே தொடர்பு, இரக்கம், நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் பாலமாக கலைஞர்கள் உள்ளனர். நம் நாடு வளர்ச்சியை நோக்கி நகரும்போது, படைப்பாற்றல் மிக்க இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களே, உங்கள் கலையை பொது நலன் மற்றும் தேச கட்டுமான நோக்கத்துக்காக பயன்படுத்துங்கள். உங்கள் இசை, நடனம், நாடகம், கலைகள் மூலம் நாட்டின் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ