பெங்களூரு: 'கிரஹஜோதி' திட்டத்தின் திருத்தத்திற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது' என, 'பெஸ்காம்' நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின், ஐந்து வாக்குறுதிகளில், கிரஹஜோதி திட்டமும் ஒன்றாகும். சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதில் முறைகேடுகள், தவறுகள் இருப்பதை அரசு கண்டுபிடித்தது. இதையடுத்து, மீண்டும் கணக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஜூலை 1ம் தேதி முதல், ஆக., 31ம் தேதி வரை ஆய்வு பணிகள் நடத்த காலக்கெடு விதிக்கப்பட்டது. பெஸ்காம் உட்பட அனைத்து 'எஸ்காம்' நிறுவனங்களின் ஊழியர்கள், தினமும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை, 70 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இன்னும், 30 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளன. ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்றும், உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாததால், கணக்கெடுப்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. சில அடுக்கு மாடிகளில் குடியிருப்போர், முறையான தகவல்களை வழங்காததால், கணக்கெடுப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், காலக்கெடுவை செப்., 30ம் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து, பெஸ்காம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில், மாநில அரசுக்கு, இந்த ஆய்வு அறிக்கையை, எஸ்காம் வழங்கும்.