பாட்டி வீட்டில் நகை திருடிய பேரன் கைது
நந்தினி லே - அவுட்: ஆட்டோ வாங்குவதற்காக, பாட்டி வீட்டில் நகை திருடிய பேரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.பெங்களூரு விஜயானந்தா லே - அவுட்டில் வசிப்பவர் புட்டநஞ்சம்மா, 70. இவர் கடந்த 1ம் தேதி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்க்கு சுற்றுலா சென்று இருந்தார். கடந்த 7 ம் தேதி திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அலமாரியும் திறந்து இருந்தது. அதில் வைத்திருந்த 125 கிராம் நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது.புட்டநஞ்சம்மா அளித்த புகாரில் நந்தினி லே - அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் சந்தேகத்தின்படி, புட்டநஞ்சம்மாவின் மகள் வழி பேரன் மிதுன், 23, என்பவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு முன் முரணாக பேசினார்.இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஆட்டோ வாங்குவதற்கு பாட்டியிடம் பணம் கேட்டு அவர் கொடுக்காததால், அலமாரிக்கு கள்ளச்சாவி தயாரித்து அதில் இருந்த நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் 81 கிராம் தங்க நகைகள், 9.44 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.