கல்வி நிறுவனங்களில் விழாக்கள் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
பெங்களூரு: பள்ளி, கல்லுாரி வளாகங்களில் விழாக்கள் நடக்கும் போது கல்வி நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி வளாகத்தில் கொடி ஏற்றும் போது மின்சார கம்பிகள் இருப்பதை சரிபார்க்க வேண்டும். கொடியை உயர்த்தும்போதும், இறக்கும்போதும் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது. கம்பத்தில் கொடி பாதியில் சிக்கி கொண்டால், கம்பத்தில் ஏறி கொடியை கழற்ற மாணவர்களை அனுமதிக்கக்கூடாது. மாணவர்கள் அணிவகுப்பு பாதை, கலாசார நிகழ்வுகளுக்கான மேடை ஆகியவற்றின் பாதுகாப்பை தவறாமல் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் சரியாக இருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டும். ப ள்ளி வாகனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும். ஓட்டுநர்களிடம் வேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தவும். பள்ளி பஸ் ஓட்டுநர்கள் மது குடித்து உள்ளனரா என்பதை ஆராய வேண்டும். அரசு, தனியார் விழாக்கள் கல்வி வளாகங்களில் நடக்கும் போது, மின்சார ஒயர்கள், சாதனங்களின் மூலம் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தண்ணீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும். உணவு தரமான, துாய்மையான முறையில் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.