பெங்களூரில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
பெங்களூரு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதன் எதிரொலியாக, பெங்களூரில் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஓய்ந்து, குளிர்காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழகத்துக்கு அருகில் இருப்பதால், மழையின் தாக்கம் பெங்களூரிலும் எதிரொலித்துள்ளது. நேற்று மதியத்தில் இருந்து சிவாஜிநகர், மாகடி சாலை, பன்னர்கட்டா, வர்த்துார், மாரத்தஹள்ளி உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில், மிதமான மழை பெய்தது. இரவில் மழை பெய்யாவிட்டாலும், குளிர் அதிகமாக இருந்தது. நேற்று காலை 8:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரை, பெங்களூரில் 0.05 செ.மீ., மழை பெய்ததாக, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இன்று முதல் 25ம் தேதி வரை பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.