உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சின்னசாமி அரங்கிற்கு மின் இணைப்பு பெஸ்காம் மீது ஐகோர்ட் அதிருப்தி

சின்னசாமி அரங்கிற்கு மின் இணைப்பு பெஸ்காம் மீது ஐகோர்ட் அதிருப்தி

பெங்களூரு: பெங்களூரின், சின்ன சாமி விளையாட்டு அரங்கிற்கு, தீயணைப்புப் படையினர் தடையில்லாச் சான்று இல்லாமல், மின் இணைப்பு வழங்கிய பெஸ்காம் மீது, கர்நாடக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.ஐ.பி.எல்., போட்டியில், ஆர்.சி.பி., வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜூன் 4ம் தேதியன்று பெங்களூரின் சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க பல லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்துக்கு பின், சின்னச்சாமி விளையாட்டு அரங்கத்தை பெஸ்காம் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விளையாட்டு அரங்குக்கு தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறாதது தெரிந்தது.இதனால் ஜூன் 16ம் தேதி, விளையாட்டு அரங்கின் மின் இணைப்பை பெஸ்காம் அதிகாரிகள் துண்டித்தனர்.இந்த நடவடிக்கையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் மனுத் தாக்கல் செய்தது. இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் ஆஜரான வக்கீல், 'தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை டி.ஜி.பி., பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் மின் இணைப்பை பெஸ்காம் துண்டித்துள்ளது' என வாதிட்டார்.இந்த வாதத்தை ஏற்காத நீதிமன்றம், சின்னச்சாமி விளையாட்டு அரங்கிற்கு தீத்தடுப்புக்கான தடையில்லாச் சான்று இல்லாத நிலையிலும், மின் இணைப்பு வழங்கிய பெஸ்காம் அதிகாரிகள் மீது, அதிருப்தி தெரிவித்தது.'ஏற்கனவே விளையாட்டு அரங்கில் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. வரும் நாட்களில் இது போன்று நடந்தால், யார் பொறுப்பு? செல்வாக்குமிக்க நபர்கள் கூறியவுடன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கை இல்லாத இடங்களுக்கு, மின் இணைப்பு அளிப்பது சரியல்ல' என கண்டித்து, மாநில அரசு, பெஸ்காம் மற்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ் அனுப்பும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி