உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் ஒலிக்கும் ஐ லவ் ஆர்.எஸ்.எஸ்., கோஷம்

கர்நாடகாவில் ஒலிக்கும் ஐ லவ் ஆர்.எஸ்.எஸ்., கோஷம்

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த மாதம் 4ம் தேதி 'ஐ லவ் முகமது' எனும் கோஷம் எழுப்பப்பட்டது. இது படிப்படியாக பல மாநிலங்களுக்கும் பரவியது. கர்நாடகாவிலும் பெலகாவி, தாவணகெரே மாவட்டங்களிலும் 'ஐ லவ் முகமது' என்ற முழக்கங்கள் ஒலித்தன. இதனால் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மாநிலத்தில், 'ஐ லவ் முகமது' பாணியில் புதிய கோஷம் எழுப்பப்பட்டு வருகிறது. 'ஐ லவ் ஆர்.எஸ்.எஸ்.,' என்ற கோஷம் நான்கு திசைகளிலும் ஒலிக்க துவங்கி உள்ளது. கர்நாடகாவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவுக்கு மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதினார். இந்த கடிதம் ஆர்.எஸ்.எஸ்., -- பா.ஜ., சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் கார்கே குடும்பம், மாநில அரசு, முதல்வரை விமர்சிக்க துவங்கினர். பயத்தில் அமைச்சர் இதை பார்த்து பயந்து போன அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்.,சை தடை செய்ய வேண்டும் என்று கூறவில்லை. நிகழ்ச்சிகள் நடத்த மட்டும் அனுமதி அளிக்க வேண்டாம் என கூறியதாக மழுப்பினார். இதனிடையே, முதல்வர் சித்தராமையா பொது இடங்களில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க, மாநில தலைமை செயலர் ஷாலினிக்கு உத்தரவிட்டார். இதனால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்கள் கொதித்து போய் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மாநில அரசுக்கு எதிராக அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தை துவங்கி விட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஐ லவ் ஆர்.எஸ்.எஸ்.,' எனும் போஸ்டர்களை ஒட்ட துவங்கி உள்ளனர். அதுவும் பிரியங்க் கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியிலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால், பிரியங்க்,'அப்செட்' ஆகி உள்ளார். இதைத்தொடர்ந்து மாண்டியா தலைமை தபால் நிலையம் முன், நேற்று அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றோர், ஐ லவ் ஆர்.எஸ்.எஸ்., என்ற போஸ்டர்களை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். பின், அவர்கள் இரு சக்கர வாகனங்களிலும், சிறிய அளவிலான ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டனர். இந்த கோஷம் விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !