உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விபத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உயிரிழப்பு: பெலகாவி, தாவணகெரே மக்கள் கண்ணீர்

 விபத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உயிரிழப்பு: பெலகாவி, தாவணகெரே மக்கள் கண்ணீர்

பெங்களூரு: கார் விபத்தில் பலியான ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஹாந்தேஷ் பீலகி பற்றி, உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. கலபுரகியின் ஜேவர்கி கோனள்ளி கிராஸ் பகுதியில், நேற்று முன்தினம் மாலை நேர்ந்த கார் விபத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, கர்நாடக மாநில கனிம கழக நிர்வாக இயக்குனர் மஹாந்தேஷ் பீலகி, 51, அவரது சகோதரர்கள் சங்கர் பீலகி, ஈரண்ணா சிரசங்கி ஆகியோர் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மூன்று பேரின் உடல்களும் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பெலகாவியின் ராய்பாக் தாலுகா பஞ்சகட்டியில் உள்ள, வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட மஹாந்தேஷ் பீலகி உடலுக்கு, பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி சென்னன்னவர் உள்ளிட்ட அதிகாரிகளும், உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சோள ரொட்டி மஹாந்தேஷ் பீலகி நேர்மையான அதிகாரி என்ற பெயரை எடுத்தவர். அவரது மரணத்தால் பெலகாவி, தாவணகெரே மாவட்ட மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரை பற்றி சில உருக்கமான தகவல்களும் வெளியாகி உள்ளன. மஹாந்தேஷ் பீலகியின் தந்தை சிவசங்கரப்பா, தாய் கங்கம்மா. மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் பிள்ளைகளை படிக்க வைக்க, சிவசங்கரப்பா, கங்கம்மா மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். மஹாந்தேஷ் தாய் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து சோள ரொட்டி தயாரித்து, வீடு, வீடாக சென்று விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தையும் கவனித்துள்ளார். துவக்க பள்ளியில் படிக்கும்போது சராசரி மாணவராக இருந்தாலும், கல்வி தான் நம்மை உயர்த்தும் என்று புரிந்து கொண்டு நன்கு படிக்க ஆரம்பித்துள்ளார். கல்லுாரியில் படிக்கும்போது சமூகவியல் படிப்பில் தங்க பதக்கம்; கர்நாடக பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுகலை படிப்பில் தங்க பதக்கம் பெற்றார். போட்டி தேர்வில் வெற்றி பெற்று, 2006ல் கே.ஏ.எஸ்., அதிகாரி ஆனார். விடாமுயற்சியுடன் படித்து 2012ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனார். மஹாந்தேஷுக்கு 5 வயது இருந்தபோதே அவரது தந்தை இறந்து விட்டார். விதவை ஓய்வூதியம் பெற அவரது தாய் விண்ணப்பித்து அதற்காக பல நாட்கள் அலைய வேண்டி இருந்தது. கடைசியாக மாதம் 25 ரூபாய் ஓய்வூதியம் பெற, 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. ஓய்வூதிய திட்டம் இதை எல்லாம் கவனித்த மஹாந்தேஷ், தாவணகெரே கலெக்டராக இருந்தபோது தாய்பட்ட கஷ்டத்தை விதவைகள் பெற கூடாது என்பதற்காக, விதவைகள் ஓய்வூதிய அதாலத் என்ற திட்டத்தை துவக்கி, விதவைகள் வீட்டு வாசலுக்கே சென்று அதிகாரிகளே ஓய்வூதியம் கொடுக்க வைத்தார். வடமாவட்ட மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்காக, தார்வாடில் ஸ்போக்கன் இங்கிலீஷ் மையத்தை துவக்கினார். மாணவர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். 'இவரை போன்று நேர்மையான, ஏழைகளுக்கான அதிகாரி கிடைப்பது கடினம்' என்று, பெலகாவி, தாவணகெரே மாவட்ட மக்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை