உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை: மகளிர் ஆணையத்துக்கு அசோக் கடிதம்

கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை: மகளிர் ஆணையத்துக்கு அசோக் கடிதம்

பெங்களூரு: கர்நாடகாவில் சிறுமியர், பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையத்திற்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் சிறுமியர், பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் 979 சிறார் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் பெங்களூரில் மட்டும் 114 வழக்குகள் பதிவாகி உள்ளன. மைசூரு தசராவுக்கு பலுான் விற்க வந்த, ஒன்பது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கலபுரகியில் நுாலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர், அதிகாரிகள் துன்புறுத்தலால் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவங்கள் அரசின் தார்மீக தோல்வியை குறிக்கின்றன. பெண்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் மீது அரசு மெத்தனம் காட்டுகிறது. இதனால் பெண்களை பாதுகாக்க, தேசிய மகளிர் ஆணையம் தலையிடுவது அவசியம். முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்த கர்நாடகாவில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல், வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசரமாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !