உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழல் குறித்து விசாரணை

கோமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழல் குறித்து விசாரணை

கோலார்: ''கோமுல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து அரசு விரைவில் விசாரணை நடத்தும்,'' என, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார். கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கோலார் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், மின் கட்டணமாக 2 கோடி ரூபாய் வரை செலுத்தி வருகிறது. இந்த செலவை குறைக்க, சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் நிறைவேற்றப்படும். 'கோமுல்' எனும் கோலார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிறைய ஊழல் நடந்துள்ளதாக சட்ட சபையில் பங்கார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி சட்டசபையில் வலியுறுத்தி உள்ளார். இதன் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிடும். மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடாவுக்கும், பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., நாராயணசாமிக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்படும். எத்தினஹொளே குடிநீர் திட்டம் ஏற்படுத்தி இருப்பதே, கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கத்தான். வேம்கல் -குருகல் பட்டண பஞ்சாயத்து தேர்தல் நடக்க உள்ளது. அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மாலுார் டவுன்சபையை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கோலார் நகராட்சியை மக்கள்தொகை அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோலாரில் தனியார் மருத்துவ கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் முன் வராமல் போனால், அரசே மருத்துவக் கல்லுாரியை ஏற்படுத்தும். கோலாரில் தக்காளி மார்க்கெட் அமைக்க 60 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மார்க்கெட் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ