9 மணி நேரம் தேவையா? பிரதமருக்கு அமைச்சர் கேள்வி
பெங்களூரு : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதற்கு பிரதமர் மோடி தாமதமாக கண்டனம் தெரிவித்ததற்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வக்கீல் உடையில் இருந்த ஒருவர், காலணியை வீசினார். இந்த சம்பவம் குறித்து தன், 'எக்ஸ்' பக்கத்தில் கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே பதிவிட்டுள்ளதாவது: தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் காலை 11:30 மணிக்கு நடந்தது. ஆனால், பிரதமர் மோடி இரவு 8:29 மணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் கோபப்படுவதற்கு 9 மணி நேரம் தேவைப்படுகிறது. இதுவே கிரிக்கெட் போட்டியாக இருந்தால், அவர் நொடிப்பொழுதில் கருத்துத் தெரிவித்திருந்திருப்பார். ஒரு தனிநபர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி உள்ளார். இது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் அல்ல; மாறாக, நீதியின் மீதான தாக்குதல், அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த தாக்குதலை பா.ஜ., மற்றும் சங் பரிவார் நிர்வாகிகள் கொண்டாடித் தீர்க்கின்றனர். இதை பார்த்து கூட மோடி கோபப்படவில்லை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டு உள்ளது.