பா.ஜ.,வில் இணையும் திட்டமா? மாஜி அமைச்சர் ஈஸ்வரப்பா மறுப்பு
பெங்களூரு: ''தற்போதைக்கு பா.ஜ.,விற்கு செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. அந்த சூழ்நிலையும் வரவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.பா.ஜ.,வின் முக்கியமான தலைவர்களில் ஈஸ்வரப்பாவும் ஒருவராக இருந்தார். ஷிவமொக்கா எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். 2023 சட்டசபை தேர்தலில், மேலிடம் இவருக்கு சீட் தரவில்லை. தனக்கு சீட் தரும்படி மன்றாடியும் பலனில்லை. இதனால் வருத்தம் அடைந்தார்.கடந்த 2024ல் லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு சீட் வழங்கும்படி, மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்தார். சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், காந்தேஷ் தொகுதியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஆனால் பசவராஜ் பொம்மையை, மேலிடம் வேட்பாளராக்கியது. இது ஈஸ்வரப்பாவின் கோபத்தை அதிகரித்தது.தன் மகனுக்கு சீட் கை நழுவ, எடியூரப்பாவும், அவரது மகன்களும் காரணம் என, ஈஸ்வரப்பா குற்றஞ்சாட்டினார். எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவை எதிர்த்து, ஷிவமொக்கா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். ஆனால் தோற்றார்.அதன்பின் எடியூரப்பாவையும், அவரது மகன்களை மட்டுமின்றி, மேலிட தலைவர்களையும் விமர்சிக்க துவங்கினார். இதனால் அவரை கட்சியில் இருந்து, மேலிடம் நீக்கியது.தற்போது அவரை பா.ஜ.,வுக்கு அழைத்துக் கொள்ள, திரைமறைவில் முயற்சி நடக்கிறது. எடியூரப்பாவின் எதிரி கோஷ்டியினர், ஈஸ்வரப்பாவை மீண்டும் கட்சிக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாநில தலைவர் விஜயேந்திராவும், 'தங்கள் தவறை உணர்ந்தவர்கள், கட்சிக்கு திரும்பலாம்' என, நேற்று ஊடகத்தினர் சந்திப்பில் கூறினார்.பெங்களூரில் நேற்று ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:தற்போதைக்கு நான் பா.ஜ.,வுக்கு செல்ல மாட்டேன். பா.ஜ.,வுக்கு செல்லும் சூழ்நிலையிலும் நான் இல்லை. முதலில் அக்கட்சியில் உள்ள குளறுபடிகள் சரியாக வேண்டும். அதன்பின் அங்கு செல்வது பற்றி ஆலோசிப்பேன்.மாநில தலைவர் விஜயேந்திரா, எனக்கு அழைப்பு விடுத்திருப்பது பற்றி தெரியவில்லை. அவரது கருத்துகள் குறித்து, நான் பதிலளிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.நட்பு வேறு... அரசியல் வேறு...ஈஸ்வரப்பா கூறுகையில், ''எனக்கும், எடியூரப்பா இடையிலான நட்பு, மிகவும் பழையது. நாங்கள் இருவரும் பார்ட்னர் ஷிப்பில் பேக்டரி நடத்தினோம். எங்களின் நட்பு அப்படியே நீடிக்கிறது. நட்புக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை. என் பிறந்த நாளுக்கு, அவர் நாளிதழ்களில் எனக்கு வாழ்த்து மடல் வெளியிட்டிருந்தார். எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அவர் வருவார்; அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் செல்வோம். நட்பு வேறு; அரசியல் வேறு,'' என்றார்.