சாலைகளை சீரமைக்காவிட்டால் வரி கட்ட மாட்டோம் எச்சரிக்கை!; கர்நாடக அரசு மீது ஐ.டி., நிறுவன ஊழியர்கள் பாய்ச்சல்
பெங்களூரின் சாலை குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் கர்நாடக அரசு இடையே, நீண்ட நாட்களாக மோதல் நடக்கிறது. சாலைகளின் தரம், போக்குவரத்து நெருக்கடி பற்றி, தொழிலதிபர் மோகன்தாஸ் பை, பல முறை சமூக வலைதளம் வழியாக அரசை விமர்சித்துள்ளார். முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர, சாலைகளும் ஒரு முக்கிய காரணம் என, கருத்து தெரிவித்தார். அதேபோன்று, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தாரும் கூட, சாலைகள் சீர் குலைந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். இதனால் துணை முதல்வர் சிவகுமார் உட்பட, அமைச்சர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதற்கிடையே ஐ.டி., நிறுவன ஊழியர்களும், அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தாவிட்டால், வரி செலுத்தமாட்டோம் என, எச்சரித்துள்ளனர். வர்துார் மற்றும் பனத்துாரில், ஐ.டி., - பி.டி., ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் ஊழியர்கள், 'டாக்ஸ் பேயர்ஸ் போரம்' என்ற பெயரில், குழு அமைத்து, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெங்களூரில் சாலைகளின் சூழ்நிலை, மிகவும் மோசமாக உள்ளது. சாலை பள்ளங்களால் விபத்துகள் நடக்கின்றன. இத்தகைய நிலையில், நாங்கள் எதற்காக சொத்து வரி செலுத்த வேண்டும். எங்களிடம் வரி செலுத்தும்படி கேட்காதீர்கள். வர்துார், பனத்துார் பகுதி சாலைகள், மோசமான நிலையில் உள்ளன. அதிகமான பள்ளங்கள் உள்ளன. எனவே இங்கு மணிக்கணக்கில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவ்வப்போது பள்ளி பஸ்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. இதனால் மனம் வெறுத்த நாங்கள், வரி செலுத்த வேண்டாம் என்ற, முடிவுக்கு வந்துள்ளோம். பள்ளங்கள் இல்லாத சாலைகளை அமையுங்கள். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பின், எங்களிடம் வரி கேளுங்கள். வர்துார் மற்றும் பனத்துார் பகுதிகளில் இருந்து, அரசுக்கு ஆண்டு தோறும் 800 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. நடமாட நல்ல சாலைகள் இல்லை. சாலைகளின் மோசமான நிலையால், பெங்களூரின் மானம், மரியாதை காற்றில் பறக்கிறது. வர்துார், பனத்துாரில் சாலைகள் மட்டுமின்றி, சாக்கடைகளும் சரியாக இல்லை. மழை பெய்தால், தண்ணீர் வர்துார் ஏரிக்கு பாய்ந்து செல்ல வழியில்லாமல், சாலைகளில் பாய்ந்து வெள்ளக்காடாக மாறுகிறது. சமீபத்தில் மழையால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இப்பகுதிகளில் தரமான சாலை, சாக்கடை, அடிப்படை வசதிகளை செய்யும் வரை, நாங்கள் வரி செலுத்தமாட்டோம். எங்கள் பகுதிகளில் வரி வசூலிக்க கூடாது என, ஹவுசிங் போர்டு, ஜி.பி.ஏ.,வுக்கு உத்தரவிடுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.