ஷில்பா ஷெட்டியின் பப்பில் ஐ.டி., ரெய்டு
பெங்களூரு: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான, பெங்களூரில் உள்ள 'பப்'பில், வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவர் ஷில்பா ஷெட்டி, 50; பிரபல பாலிவுட் நடிகை. இவருக்கு சொந்தமான, 'பப்' பெங்களூரு அசோக்நகர் செயின்ட் மார்க் ரோட்டில், 'பாஸ்டியன்' என்ற பெயரில் இயங்கி வருகிறது. நேற்று காலை 7:00 மணிக்கு இந்த பப்பிற்கு, மும்பை வருமான வரி அதிகாரிகள், ஐந்து கார்களில் வந்தனர். பப்பிற்குள் சென்று சோதனை நடத்தினர். கணக்கு, வழக்குகளை சரிபார்த்தனர். மதியம் வரை சோதனை நடத்தப்பட்டது. பப்பில் இருந்து ஏதாவது ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனரா என்பது பற்றி, தகவல் இல்லை. வரி ஏய்ப்பு செய்ததால், பப் மீது சோதனை நடந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது 60 கோடி ரூபாய் மோசடி வழக்கு மும்பையில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் சோதனை நடந்து இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 11 ம் தேதி இரவு இந்த பப் பில், ஒரு தொழில் அதிபருக்கும், பப் ஊழியர்களும் இடையில் தகராறு நடந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி பப் திறந்து வைத்திருந்ததாக, பப் நிர்வாகம் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.