86 ஆண்டுகளுக்கு பின் எச்.ஏ.எல்., வளாகத்தில் ஜெயசாமராஜேந்திர உடையார் சிலை திறப்பு
பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு நிலம், பொருளாதார நிதி வழங்கிய ஜெயசாமராஜேந்திர உடையாருக்கு, 86 ஆண்டுகளுக்கு பின் நேற்று எச்.ஏ.எல்., நிர்வாக அகாடமியின் புதிய வளாகத்தில் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்க, தொழிலதிபர் வால்சந்த் ஹிரேசந்த் முன்வந்தார். இதை பெங்களூரில் துவங்க சர் எம்.விஸ்வேஸ்வரய்யா அழைப்பு விடுத்தார். அப்போது, மைசூரு மன்னராக இருந்த, 21 வயதேயான ஜெயசாமராஜேந்திர உடையார், எச்.ஏ.எல்.,க்கு என, 700 ஏக்கர் நிலம் வழங்கினார். அத்துடன், எச்.ஏ.எல்.,க்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் நிதியும் தந்தார். எச்.ஏ.எல்., அமைவதில் பங்கேற்றவர்கள் நினைவில் இருக்கும் போது, அவர்களை போன்று, தொலைநோக்கு பார்வையுடன் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்த ஜெயசாமராஜேந்திர உடையார் பெயர், நாளடைவில் அனைவரின் நினைவில் இருந்து மறைந்தது. இந்நிலையில், 86 ஆண்டுகளுக்கு பின், எச்.ஏ.எல்., நிர்வாக அகாடமியின் புதிய வளாகத்தில், ஜெயசாமராஜேந்திர உடையாருக்கு சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, எச்.ஏ.எல்., நிறுவன நாளான நேற்று, அதன் வளாகத்தில் ஜெயசாமராஜேந்திர உடையார் சிலையை, மன்னர் குடும்பத்தை சேர்ந்தவரும், மைசூரு பா.ஜ., - எம்.பி.,யுமான யதுவீர் உடையார் நேற்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ''விண்வெளி மற்றும் பாதுகாப்பில், எச்.ஏ.எல்., முன்னணியில் உள்ளது. எச்.ஏ.எல்., வழிகாட்ட, நாங்கள் முன்னேறி வருகிறோம்,'' என்றார்.