நாளை அமைதி கூட்டம் கலபுரகி கலெக்டர் அழைப்பு
கலபுரகி: சித்தாபூரில் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக நாளை அமைதி கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., உட்பட 10 அமைப்புகளுக்கு கலபுரகி மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கலபுரகி மாவட்டம் சித்தாபூரில், அக்., 19 ல் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., அனுமதி கேட்டிருந்தது. அதுபோன்று, பீம் ஆர்மி அமைப்பும் அதே நாளில் கேட்டிருந்தது. இரு அமைப்பிற்கும் தாசில்தார் அனுமதி மறுத்தார். இதை கண்டித்து, கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளையியில் ஆர்.எஸ்.எஸ்., மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், தாசில்தார் உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., மீண்டும் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அன்றைய தினம் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, அக்., 30ல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, கலபுரகி கலெக்டர் பவுசியா தரனும், ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட ஆர்.எஸ்.எஸ்., உட்பட 10 அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், 'ஊர்வலத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, நாளை காலை 11:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கூட்டத்திற்கு தங்கள் அமைப்பை சேர்ந்த மூவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்,' என்று குறிப்பிட்டு உள்ளார்.