உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கம்பாலா போட்டிக்கு தடை விதிக்க முடியாது பீட்டா வழக்கில் கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

 கம்பாலா போட்டிக்கு தடை விதிக்க முடியாது பீட்டா வழக்கில் கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் கம்பாலா போட்டி நடத்த தடை விதிக்க முடியாது என்று கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம், பிலிகுலா மிருகக்காட்சி பூங்கா அருகில் கம்பாலா நடத்துவது குறித்து, மத்திய மிருகக்காட்சி சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று, கர்நாடகாவில் துளு மொழியினரின் பாரம்பரிய வீர விளையாட்டான 'கம்பாலா' எனும் எருது விடும் போட்டி பிரசித்தி பெற்றது. 2023ல் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது. இதை 13 லட்சம் மக்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில், 'பீட்டா' எனும் விலங்குகள் நல அமைப்பு, 2024ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில், 'தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களை தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் கம்பாலா போட்டியை நடத்துவதற்கு தடை விதிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் மங்களூரின் பிலிகுலா உயிரியல் பூங்கா அருகில் கம்பாலா நடத்த திட்டமிட்டுள்ளதற்கு அனுமதி வழங்கக் கூடாது' என கூறப்பட்டிருந்தது. இம்மனு மீது முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தது. நேற்று இந்த மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி விபு புக்ரு கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் மக்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும், உள்ளூர் கால்நடை இனங்களின் உயிரையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா அல்லது காளை வண்டி பந்தயம் ஆகியவை முக்கிய பங்கை கொண்டுள்ளது. இந்த காரணத்தால், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு வெளியே எந்த இடத்திலும் கம்பாலாவை நடத்துவதை அரசு தடை செய்ய வேண்டும் என்ற மனுதாரர் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் மனுவில், பிலிகுலா உயிரியல் பூங்காவில் அருகில் கம்பாலா நடத்த ஏற்பாடு செய்வது, அங்குள்ள விலங்களுக்கு இடையூறு விளைவிக்கும். கம்பாலா நடக்கும் பகுதி, 197 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவுக்குள் வருகிறதா என்பதை பார்க்க வேண்டும். மிருகக்காட்சி சாலை அங்கீகார விதிகள் 2009ன் படி, ஒவ்வொரு மிருகக்காட்சி சாலையும், மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையத்தால், அங்கீகரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானை வைத்திருக்க வேண்டும். இந்த சூழலில், பிலிகுலா பூங்காவின் மாஸ்டர் பிளான் மத்திய ஆணையத்திடம் உள்ளது. இந்த ஆணையத்தை, இவ்வழக்கில் பிரதிவாதியாக்கி, நோட்டீஸ் அனுப்பி, பூங்காவின் மாஸ்டர் பிளானின் ஒப்புதல் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வழக்கு விசாரணை, டிச., 17க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை