| ADDED : நவ 20, 2025 03:39 AM
பெங்களூரு: நாட்டுப்புற கலைஞர்களை அவமதித்தற்காக, கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே மன்னிப்பு கோரியுள்ளார். மைசூரில் நேற்று முன்தினம் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் புருஷோத்தம் பிலிமலே பேசியதாவது: கர்நாடகாவின் புகழ்பெற்ற நாட்டுப்புற கலைகளில் ஒன்று யக் ஷகனா. இதில், மஹாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட புராணங்களை கலைஞர்கள் நடித்துக் காட்டுவர். இந்த கலையில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் ஓரின சேர்க்கையாளர்களாகவே இருப்பர். பெண்கள், கட்டாயம், சில அசிங்கங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு அடுத்த கச்சேரியில் வாய்ப்பு கிடைக்காது. இவ்வாறு அவர் பேசியிருந்தார். இவரது பேச்சு, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவரே நாட்டுப்புற கலைஞர்களை அவமதிப்பதா என சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அவரது கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், இந்த விவகாரம் அரசியலிலும் சூடுபிடித்தது. எனவே, பிலிமலே பதவி விலக வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. இதையடுத்து, பிலிமலே நேற்று அளித்த பேட்டி: நான் நாட்டுப்புற கலைஞர்க ளை அவமதிக்கவில்லை. அப்படி செய்வதும் எனக்கு பிடிக்காது. யக் ஷகனாவில் ஓரின சேர்க்கையாளர்கள் 1960, 1970 கால கட்டங்களில் இருந்தனர். அதைத்தான் கூறினேன். இப்போது இருப்பதாக நான் கூறவில்லை. இருப்பினு ம், என் கருத்து நாட்டுப்புற கலைஞர்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக என்னை கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கோரி அழுத்தம் தரப்பட்டால் பதவி விலகுவேன். இவ்வாறு அவர் கூறினார்.