உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு தேர்தல் கமிஷனுக்கு மாநில அரசு சிபாரிசு

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு தேர்தல் கமிஷனுக்கு மாநில அரசு சிபாரிசு

பெங்களூரு:உள்ளாட்சித் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்த மாநில தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்ய, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரின் விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: மாநில உள்ளாட்சித் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்ய, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. சமீப ஆண்டுகளாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உயிருடன் இல்லாதவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஓட்டுத் திருட்டு குறித்து சர்ச்சை நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது. எனவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்ய, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில தேர்தல் கமிஷன், உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க, திருத்தங்கள் செய்ய தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வர, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்டம், விதிமுறைகள் வகுக்க வேண்டும். வரும் நாட்களில் தேர்தல் கமிஷன், மாநில அரசு வகுக்கும் சட்டப்படி செயல்படும். 'முடா' வழக்கில், முதல்வர் சித்தராமையா குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. 'முடா' குறித்து விசாரணை நடத்த, நாங்கள் தேசாய் ஆணையம் அமைத்திருந்தோம். ஆணைய அறிக்கையில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லை. அதிகாரிகள் தவறு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிபாரிசு செய்துள்ளார். இந்த அறிக்கையை ஏற்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சிப் பணிகளில் நடந்த ஊழல் தொடர்பாக, நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணைய அறிக்கையை பெற்றுள்ளோம். இதுகுறித்து, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் விவாதித்து, முடிவு செய்வோம். சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில், 2019ல் சிவகுமார் கைதானதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது வழக்குப் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக, 11 வழக்குகளை திரும்பப் பெற, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதை தவிர பல்வேறு வழக்குகள் தொடர்பாக, 62 கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை