கோலார் காங்., – எம்.எல்.ஏ., மஞ்சுநாத் மனு உச்ச நீதிமன்றம் நிராகரிப்பால் பின்னடைவு
– நமது நிருபர் –- போலி ஜாதி சான்றிதழ் சர்ச்சை தொடர்பாக, கோலார் தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் ஜி.மஞ்சுநாத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முல்பாகல் தனி தொகுதியில், 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு கொத்துார் மஞ்சுநாத் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த ம.ஜ.த.,வின் முனி நஞ்சப்பா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மஞ்சுநாத் தாக்கல் செய்த ஜாதி சான்றிதழில், எஸ்.சி.,க்கு உட்பட்ட ‘புடக ஜங்கமா’ என போலியாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் ‘பைரகி’ என்ற பிரிவை சேர்ந்தவர். எனவே அவர் தாக்கல் செய்திருந்த ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க, கோலார் மாவட்ட கலெக்டருக்கும், முல்பாகல் தாசில்தாருக்கும் உத்தரவிட்டிருந்தது. மஞ்சுநாத்தின் ஜாதி சான்றிதழை சரி பார்த்ததில், அவர் பைரகி ஜாதியைச் சேர்ந்தவர் என்று உயர் நீதிமன்றத்திற்கு கோலார் மாவட்ட கலெக்டர் அறிக்கை சமர்பித்தார். இதை தொடர்ந்து, மஞ்சுநாத்தின் புடக ஜங்கமா ஜாதி சான்றிதழை கர்நாடக உயர்நீதிமன்றம், 2026 ஏப்ரல் 17ல் ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, மஞ்சுநாத், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்விஷயத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிடப் போவதில்லை என்று கூறி அவர் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், எம்.எல்.ஏ., மஞ்சுநாத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.