உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க கிருஷ்ணபைரே கவுடா முன்னெச்சரிக்கை

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க கிருஷ்ணபைரே கவுடா முன்னெச்சரிக்கை

பெங்களூரு: ''கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்,'' என அதிகாரிகளுக்கு, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரில் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தலைமையில் அமைச்சரவை துணை கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. நடப்பாண்டு மழை, விவசாயம், குடிநீர், வானிலை, அணைகளில் நீரின் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.அதிகாரிகள்: கடந்தாண்டை விட இந்தாண்டு பிப்.,யில் வெயிலின் அளவு 2.5 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. பருவமழைக்கு முன், ஏப்ரல் - மே மாதங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே வேளையில், வழக்கத்தை விட பருவமழை காலத்தில், அக்டோபர், நவம்பர், டிசம்பர்களில் மழை குறையும் வாய்ப்பு உள்ளது.அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா: கோடை காலத்தில் மாநிலத்தின் எந்த பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.அதிகாரிகள்: தற்போது மாநிலத்தின் 14 முக்கிய அணைகளில், 535.21 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. இதுவே கடந்தாண்டு, 332.53 டி.எம்.சி.,யாக இருந்தது.அமைச்சர்: அடுத்த கூட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு குறித்து விரிவாக தகவல்கள் தரவும். தினமும் அணைக்கு வரும் நீர் வரத்து, குடிநீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீர்ப்பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விடவும்.அதிகாரிகள்: பெங்களூரு நகரம், ராம்நகர், சிக்கபல்லாபூர், துமகூரு, சித்ரதுர்கா ஆகிய ஐந்து மாவட்டங்களின் 13 தாலுகாக்களில் உள்ள 66 கிராமங்களுக்கு வாடகை குடிநீர் டேங்கர், போர்வெல் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில், குறிப்பாக பெங்களூரு நகரம், சிக்கபல்லாபூர் ஆகிய இரு மாவட்டங்களின் ஐந்து நகர உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட 56 வார்டுகளுக்கு குடிநீர் டேங்கர், போர்வெல்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.அமைச்சர்: குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்று இந்தாண்டும் கூடுதலாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். நிவாரண நிதி வழங்குவதில் நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை. கலெக்டர்களிடம் மொத்தம் 488.30 கோடி ரூபாய் உள்ளது. அடுத்த கூட்டத்தில் குடிநீர் தொடர்பாக முழு தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !