உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குன்ஹா ஆணையம் பரிந்துரை நிறைவேற்றி அறிக்கை அளிக்க கே.எஸ்.சி.ஏ.,க்கு உத்தரவு

குன்ஹா ஆணையம் பரிந்துரை நிறைவேற்றி அறிக்கை அளிக்க கே.எஸ்.சி.ஏ.,க்கு உத்தரவு

பெங்களூரு: ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா ஆணையம் அளித்த பரிந்துரைகளை சின்னச்சாமி விளையாட்டு மைதானத்தில் நிறைவேற்றுவதுடன், அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு போலீஸ் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, கே.எஸ்.சி.ஏ.,க்கு, பெங்களூரு போலீசார் எழுதிய கடிதம்: சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டுமானால், போலீஸ் துறை விதித்துள்ள நிபந்தனைகளை, கே.எஸ்.சி.ஏ., பின்பற்ற வேண்டும். விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்பகுதிகளில், பிரதான சாலைகள் உள்ளன. வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. விளையாட்டு போட்டிகள் நடத்தும்போது, பார்க்கிங் வசதியை கே.எஸ்.சி.ஏ., செய்ய வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்வதற்கு முன், விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்ய வேண்டும். பார்வையாளர்களுக்கு தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நுழைவு வாசல்களிலும், 'பேக் ஸ்கேனர்' பொருத்த வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்ய, போலீஸ் துறையிடம் அனுமதி பெற வேண்டும். சிறப்பு தொழில்நுட்பம் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு தனி நுழைவு வாசல் அமைக்க வேண்டும். எந்த பிரச்னைகளும் ஏற்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். பார்வையாளர்கள் வருவதற்கு முன்பே, அந்த இடத்தில் டாக்டர்கள், நர்ஸ்கள், ஆம்புலன்ஸ்கள் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் வருவதற்கும், திரும்பிச் செல்வதற்கும் நுழைவுவாசல் வசதி செய்ய வேண்டும். தீ விபத்தை கட்டுப்படுத்தும் சாதனம் இருக்க வேண்டும். பார்வையாளர்களை கண்காணிக்க, சிறப்பு தொழில்நுட்ப வசதி செய்ய வேண்டும். விளையாட்டு அரங்கின் சுற்றிலும் உள்ள கேட்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா ஆணையம் பரிந்துரை செய்த அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை சரி செய்து, போலீஸ் துறைக்கு கே.எஸ்.சி.ஏ., அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை