| ADDED : நவ 14, 2025 05:27 AM
மாண்டியா: சில நாட்களுக்கு முன்புதான், டில்லியில் காரில் குண்டு வெடித்து பலர் இறந்தனர். இத்தகைய சூழ்நிலையில், முக்கிய அணையான கே.ஆர்.எஸ்., அணைக்கு பாதுகாப்பு பற்றாக்குறை உள்ளது. மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள, கர்நாடகாவின் முக்கியமான இடங்களில், கே.ஆர்.எஸ்., அணையும் ஒன்றாகும். ஆனால் இங்கு பாதுகாப்பு போதுமானதாக இல்லை. டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கு பின், கர்நாடக அரசு உஷாராகியுள்ளது. முக்கியமான இடங்களில், பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இதன்படி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., அணையின் பாதுகாப்புக்கு, 260 போலீசார் தேவைப்படுகின்றனர். ஆனால் 65 பேர் மட்டுமே பாதுகாப்புக்கு உள்ளனர். வெறும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் உள்ளன. கே.ஆர்.எஸ்., அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவை கண்காணிக்க, 70 முதல் 80 கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படுகின்றன. வெறும் நான்கு கேமராக்கள் உள்ளன. பாதுகாப்புக்கு ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் இங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீசார், பணி நெருக்கடியால் அவதிப்படுகின்றனர். விடுமுறையும் கிடைப்பது இல்லை. கூடுதல் பாதுகாப்பு போலீசாரை நியமிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.