தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை முதல்வருக்கு சட்ட அமைச்சர் கடிதம்
பெங்களூரு: சட்டவிரோத கனிம சுரங்க வழக்கில் தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் சித்தராமையாவுக்கு, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:கர்நாடகாவில் 2008 முதல் 2013 வரையிலான பா.ஜ., ஆட்சியில், பல்லாரியில் நடந்த கனிம சுரங்க முறைகேட்டை கண்டித்து, பெங்களூரில் இருந்து பல்லாரி வரை பாதயாத்திரை நடத்தி, மக்கள் கவனத்தை ஈர்த்தீர்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கனிம சுரங்க முறைகேட்டில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் கூறினோம்.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், கனிம சுரங்க முறைகேட்டை விசாரிக்க, என் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டது. முறைகேட்டால் அரசுக்கு 1.50 லட்சம் கோடி, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக அறிக்கை கொடுத்துள்ளோம். ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து ஹெச்.கே.பாட்டீல் ராய்ச்சூரில் நேற்று அளித்த பேட்டி:முதல்வருக்கு எழுதியது அரசியல் தொடர்பான கடிதம் இல்லை. மாநில நலனுக்கானது. அரசுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதாலும், கனிம முறைகேடு நடந்ததற்கான சாட்சிகள் அழிக்கப்பட கூடாது என்ற நோக்கத்துடனும் கடிதம் எழுதி இருக்கிறேன். மாநிலத்தில் 12,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்க வழக்குகள் பதிவாகி உள்ளன.இதில் 7 சதவீதம் மட்டும் விசாரிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 சதவீத வழக்கில் தான் தீர்ப்பு வந்துள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம முறைகேடு தொடர்பாக 9 வழக்குகள் சி.பி.ஐ.,க்கு கொடுக்கப்பட்டது. இதில் ஆறு வழக்குகளை, எங்களுக்கு திருப்பி அனுப்பினர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் முன்னேற்றம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.