வக்கீல் மர்ம சாவில் திருப்பம் விபத்தில் இறந்தது அம்பலம்
கெங்கேரி: நைஸ் சாலையில் வக்கீல் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், லாரி மோதி அவர் இறந்தது அம்பலமாகி உள்ளது.மாண்டியாவின் மலவள்ளியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 52. வக்கீல். பெங்களூரு கெங்கேரி அருகே உல்லாலில் குடும்பத்துடன் வசித்தார். கடந்த 2ம் தேதி இரவு நைஸ் சாலையின் பன்னர்கட்டா - கனகபுரா வழித்தடத்தில் சாலையோரம் இறந்துகிடந்தார்.அவர் உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் 'இண்டிகேட்டர்' போடப்பட்ட நிலையில் அவரது கார் நின்றது. கொள்ளை முயற்சியில் ஜெகதீஷை யாராவது கொன்றார்களா அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.கெங்கேரி போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஒரு தனிப்படை அமைத்து மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் உத்தரவிட்டிருந்தார்.நைஸ் சாலையின் சுங்கச்சாவடி சாலையில் ஊர் வழிகாட்டும் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது லாரி மோதி விபத்தில் வக்கீல் இறந்தது தெரிந்தது.அதாவது ஜெகதீஷ் ஓட்டி சென்ற காரின் வலது பக்கம், ஒரு லாரி உரசியது. சிறிது துாரம் சென்று, லாரியை டிரைவர் நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய ஜெகதீஷ், லாரி டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது சாலையின் நடுவே அவர் வந்துள்ளார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த, இன்னொரு லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டு, ஜெகதீஷ் இறந்துள்ளார்.இதை பார்த்து முதலில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் அங்கிருந்து தப்பினார். ஜெகதீஷ் மீது மோதிய லாரியை ஓட்டிய டிரைவருக்கு, விபத்து ஏற்படுத்தியது பற்றி தெரியவில்லை.கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், ஜெகதீஷ் மீது மோதிய லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் மீது மோதிய லாரியின் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.