வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த நாட்டில் அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளை வழக்கறிஞ்சர்களும் நீதி மன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு காப்பாற்றுவதால் அரசமைப்பு படி ஆட்சி நடத்தாமல் குற்றங்கள் பல செய்து நேர்மையானவர்களை ஒடுக்கும் பணியை செய்கின்றனர்.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காப்பாற்றிய, மூத்த வக்கீல் புட்டேகவுடாவுக்கு கட்டணமாக 35 லட்சம் ரூபாய் கொடுக்காமல் பெங்களூரு மாநகராட்சி இழுத்தடிப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் சொத்துகள் தொடர்பான வழக்குகளில், மாநகராட்சி சார்பில் வாதிட்டு வந்தவர் மூத்த வக்கீல் புட்டே கவுடா. இவர், 1986 முதல் 2024 வரை, மாநகராட்சி சொத்துகள் தொடர்பான வழக்குகள், பொது நலன் மனு உட்பட, 8,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் திறமையாக வாதிட்டார். முக்கிய பங்கு
மாகடி சாலையின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஏரி நிலம், மல்லேஸ்வரத்தின் மில்க் காலனியில் எட்டு ஏக்கர் நிலம், மாநகராட்சி வசமானதில், இவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த 8 ஏக்கரில், 4 ஏக்கர் பகுதியில் தற்போது பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதி மக்களின் நடைபயிற்சிக்கு பயன்படுகிறது.அதேபோன்று, பைரசந்திரா ஏரி, காபி போர்டு லே - அவுட்டின் பூங்கா இடம், பி.டி.எம்., லே - அவுட்டின் பூங்கா இடத்தை, மாநகராட்சிக்கு மீட்டு கொடுத்தவரும் இவரே.சாலைப் பள்ளங்கள், நீதிமன்ற உத்தரவு மீறியது என, பல்வேறு விஷயங்களில் நீதிமன்றம் கோபமடைந்து, மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து சிறைக்கு அனுப்புவதாக எச்சரித்தபோது, மாநகராட்சிக்கு பக்கபலமாக நின்று, பல அதிகாரிகள் சிறைக்கு செல்வதில் இருந்து காப்பாற்றினார்.விசாரணையின்போது, அதிகாரிகள் மீது நீதிபதிகள் எரிச்சல் அடைந்த தருணங்களில், வக்கீல் புட்டே கவுடா, நீதிபதிகளின் மனதை கரைத்து சமாதானம் செய்தார்.இவர் எழுதிய சுயசரிதையில், மாநகராட்சி சார்பில் வாதிட்ட அனைத்து வழக்குகள் குறித்தும் விவரித்துள்ளார். புட்டே கவுடா மூன்று ஆண்டுகளாக, எம்.என்.டி., எனும் மோடர் நியூரான் டிசார்டர் என்ற அரிதான நோயால் அவதிப்படுகிறார்.நிமான்ஸ் உட்பட, 12 சிறப்பு வல்லுநர்களிடம் சிகிச்சை பெற்றார். இந்த நோய்க்கு நம்நாடு உட்பட, எந்த நாட்டிலும் மருந்துகள் இல்லையென, டாக்டர்கள் கூறிவிட்டனர்.தற்போது ஊட்டச்சத்தான உணவு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு நாட்களை நகர்த்துகிறார். தினம் 24 மணி நேரமும் நர்ஸ் பராமரிப்பில் இருக்கிறார். மாதந்தோறும் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 38 ஆண்டுகள் நேர்மையான முறையில் மாநகராட்சி வக்கீலாக பணியாற்றிய புட்டே கவுடாவின் சிகிச்சை செலவை, மாநகராட்சி ஏற்றிருக்கலாம்.ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்ந்தபோது, 10 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மாநகராட்சி கை கழுவியது. அதன்பின் எந்த அதிகாரிகளும், அவரது வீட்டை எட்டியும் பார்க்கவில்லை. தவிப்பு
சிகிச்சைக்காக ஏற்கனவே லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்த புட்டேகவுடா, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். இதுகுறித்து, மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு புட்டே கவுடா மனம் நொந்து கடிதம் எழுதியும் பதில் இல்லை.துணை முதல்வர் உட்பட பலரிடம் முறையிட்டும் பயன் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக பணத்துக்கு முயற்சிக்கிறார்.இதுகுறித்து, வக்கீல் புட்டே கவுடா கூறியதாவது:நான் உடல் நிலை பாதிப்புக்கு ஆளானதால், என்னிடம் இருந்த பெங்களூரு மாநகராட்சியின், 250 வழக்குகளை திருப்பிக் கொடுத்துவிட்டேன். 2014 முதல் மாநகராட்சி எனக்கு கட்டணம் கொடுக்கவில்லை.அன்று முதல் நான் நடத்திய ஒவ்வொரு வழக்குக்கும், குறைந்தபட்சம் 15,000 வீதம் 35 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கோரியுள்ளேன்.கடந்த 38 ஆண்டுகளாக, மாநகராட்சி வக்கீலாக ஆயிரக்கணக்கான வழக்குகளை திறம்பட நடத்தினேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டு கொடுத்தேன்.என் மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாக உள்ளது. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கட்டணத்தை தராமல், அலட்சியம் செய்வது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நாட்டில் அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளை வழக்கறிஞ்சர்களும் நீதி மன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு காப்பாற்றுவதால் அரசமைப்பு படி ஆட்சி நடத்தாமல் குற்றங்கள் பல செய்து நேர்மையானவர்களை ஒடுக்கும் பணியை செய்கின்றனர்.