| ADDED : நவ 21, 2025 06:22 AM
சிக்கமகளூரு, நவ. 21- வீட்டு வாசலில் நின்றிருந்த 5 வயது சிறுமியை, சிறுத்தை துாக்கிச் சென்று கொன்றதால், கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகல்கோட் மாவட்டம், ஹுன்குந்த் தாலுகாவின், கும்மத்தகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்கின்றனர். இவர் பணி நிமித்தமாக, சிக்கமகளூரு மாவட்டம், கடூரு தாலுகாவின், பீருரு அருகில் உள்ள நவிலேகல்லுகுட்டா கிராமத்துக்கு, குடும்பத்துடன் வந்துள்ளார். சில நாட்களாக கிராமத்தி ல் தங்கியிருக்கின்றனர். நேற்று மாலை இவரது மகள் சான்வி, 5, வீட்டு முன் நின்று கொண்டிருந்தாள். தந்தை பசவராஜும் அங்கிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுத்தை, தந்தையின் கண் முன்பே, சிறுமியை துாக்கிச் சென்றது. அக்கம், பக்கத்தினர் அலறி கூச்சலிட்டதால், சிறிது தொலைவில் சிறுமியை போட்டுவிட்டு தப்பிவிட்டது. கழுத்துப் பகுதியை சிறுத்தை கடித்ததால், சிறுமி உயிரிழந்தாள். தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பும், சிறுத்தை பலரை தாக்கி காயப்படுத்தியது. இனியாவது சிறுத்தையை பிடிக்கும்படி, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.