லாட்ஜில் மர்மமாக இறந்த வாலிபரின் கல்லீரல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
மடிவாளா: லாட்ஜில் மர்மமாக இறந்த வாலிபர் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, உடலில் காயம் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டறிய, அவரது கல்லீரல், மலக்கழிவு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தட்சிண கன்னடாவின் புத்துாரைச் சேர்ந்தவர் தக் ஷித், 20. இவர், தன் காதலி பிரியங்கா, 19, என்பவருடன், கடந்த 9ம் தேதி பெங்களூரு வந்தார். மடிவாளாவில் லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கினர். கடந்த 17ம் தேதி காலை அறையில் இருந்து, பிரியங்கா மட்டும் தனியாக வெளியே சென்றார்; இரவு ஆகியும் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், அறைக்கு சென்று பார்த்த போது தக் ஷித் இறந்து கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக் ஷித்துக்கும், பிரியங்காவிற்கும் இடையில் ஏதாவது சண்டை நடந்து இருக்கலாம். தாக்குதலில் அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். ஆனால், நேற்று முன்தினம் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், 'தக் ஷித் உடலில் எந்த காயமும் இல்லை' என்று கூறப்பட்டு உள்ளது. இதனால், தக் ஷித் சாவில் சந்தேகம் நீடிக்கிறது. லாட்ஜில் தங்கியிருந்த போது, இருவரும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். உணவு ஒத்துகொள்ளாமல் இருவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் மாத்திரை வாங்கி சாப்பிட்டது பற்றி, லாட்ஜ் ஊழியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மாத்திரை சாப்பிட்டதால் இறந்தாரா அல்லது உணவில் ஏதாவது பிரச்னையா என்பதை கண்டறிய, தக் ஷித்தின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட கல்லீரல், மலக்கழிவுகள், தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.